முதல் நாளில் ரூ.60 கோடி அள்ளிய பாகுபலி?

  • IndiaGlitz, [Saturday,July 11 2015]

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ரம்யாகிருஷ்ணன், நாசர், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் நேற்று பிரமாண்டமான ரிலீஸான 'பாகுபலி' திரைப்படம், ஒரே நாளில் ரூ.60 கோடி வசூல் செய்து இந்திய திரைப்படங்களில் முதல் நாளில் மிக அதிக வசூலை பெற்ற படம் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் ஷாருக்கான் நடித்த 'ஹேப்பி நியூ இயர்' திரைப்படம் ரூ.44.97 கோடி வசூல் செய்ததே சாதனையாக இருந்தது.


இந்தியாவில் மட்டும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் சுமார் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்.எஸ்.ராஜமவுலி உள்பட படக்குழுவினர் பட்ட கஷ்டங்களுக்கு பெரும்பலன் கிடைத்துள்ளதாகவும், இதே உற்சாகத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தென்னிந்திய திரைப்படம் ஒன்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருப்பது குறித்து பாலிவுட் திரையுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன