Download App

Aruvi Review

அருவி - அருமையான சமூக அக்கறைப்படம்

பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லை, பிரமாண்டம் இல்லை, வெளிநாட்டு பின்னணியில் பாடல்கள் இல்லை, அதிர வைக்கும் ஆக்சன் காட்சிகள் இல்லை, காமெடிக்கென தனி டிராக் இல்லை, ஆனாலும் அழுத்தமான கதையும் அதை சொல்லும் விதம் சரியாக இருந்தால் ஒரு படத்தை புதுமுகங்களுடன் துணையுடன் வெற்றிப்படமாக முடியும் என்பது மிக மிக அரிதாகத்தான் கோலிவுட் திரையுலகில்  நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சேரும் படமா அருவி? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

அப்பா, அம்மாவுக்கு செல்லப்பிள்ளை, ஒரே தம்பியுடன் செல்லமாக வளரும் சுட்டிப்பெண் அருவி. அப்பாவுக்கு வேலை மாற்றம் காரணமாக சென்னை வருகின்றனர். சென்னை அருவிக்கு முதலில் பிடிக்கவில்லை. பின்னர் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, காதல், புரபோஸ், தோழிகள் என ஜாலியாக சென்று கொண்டிருந்த அருவியின் வாழ்க்கையில் திடீரென ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அதுவரை கொஞ்சி விளையாடிய அப்பா அருவியை அடியோடு வெறுக்கிறார், அம்மா கரித்து கொட்டுகிறார், தம்பி முகம் பார்த்து கூட பேச மறுக்கிறான். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே போ என துரத்துறார் அப்பா. வீட்டை விட்டு வெளியேறும் அருவி, ஒரு பெண் தனியாக வாழ்ந்தால் என்னென்ன கஷ்டங்களை அனுபவிப்பாரோ, அத்தனை அனுபவத்தையும் பெறுகிறார். இடைவேளைக்கு முன் அருவி உண்மையில் யார், எதனால் அனைவரும் அவரை வெறுத்தனர் என்பதற்கு காரணம் தெரிவதும், அதன்பின்னர் நடைபெறும் ஜெட் வேக காட்சிகளும் தான் படத்தின் மீதிக்கதை

அருவி கேரக்டரில் நடித்திருக்கும் ஆதித்தி பாலன், கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும். பல படங்கள் நடித்து அனுபவம் உள்ள ஒரு நடிகை கூட கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய இந்த கேரக்டரில் ஒரு புதுமுகம் மிக இயல்பாக நடித்துள்ளார் என்பதே ஒரு மிகபெரிய வியப்பு. முகத்தில் இத்தனை உணர்ச்சிகளை காண்பிக்கும் அவரது நடிப்புக்கும், அவரது நடிப்பை வெளிப்படுத்திய இயக்குனருக்கும் ஒரு சபாஷ்

'சொல்வதெல்லாம்' சத்தியம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் லட்சுமி கோபால்சாமியை தவிர இந்த படத்தில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள். நாயகி பெயர் உள்பட யாருடைய பெயரும் மனதில் தங்கவில்லை. ஆனால் அவர்கள் நடித்த கேரக்டர்கள் அனைத்துமே மனதை விட்டு அகலவில்லை. குறிப்பாக 'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சியின் குழுவினர் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த படத்தின் இயக்குனருக்கு அருண்பிரபு புருஷோத்தமனுக்கு ஒரு சபாஷ். முதல் படமே முத்திரை பதிக்கும் படமாக இயக்கியுள்ளார். முதல்பாதியில் 'சொல்வதெல்லாம் சத்தியம்' நிகழ்ச்சியின் காட்சிகள் கொஞ்சம் அதிகமாக உள்ளதே என சலிப்படையும் நேரத்தில் திடீரென ஒரு டுவிஸ்டை வைத்து பார்வையாளர்களை நிமிர வைத்துள்ளார். படத்தின் கதைக்கு தேவையில்லாத காட்சிகள் என்று நினைத்த காட்சிகள் அனைத்துமே படத்தின் கதையோட்டத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர வைக்கின்றார். 20 பேர் அருவியிடம் பணயக்கைதிகளாக இருப்பது, ஒரு பெண்ணை பிடிக்க தனி அதிகாரி உள்பட ஸ்பெஷல் படைகளை வரவழைப்பது போன்ற காட்சிகளில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இந்த படத்தில் ஏகப்பட்ட பிளஸ்கள் இருப்பதால் இவை ஒரு பெரிய குறையாக தெரியவில்லை. கடைசி இருபது நிமிட காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவுக்கு உள்ளது என்பதும் திரையரங்கில் இருந்து வெளியே வரும் ஒவ்வொரு பார்வையாளனும் கனத்த இதயத்துடன் வெளிவருவதும் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படும்

இந்த படம் சமூகத்திற்கு சில முக்கிய செய்திகளை கூறியதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. எந்த தவறும் செய்யாத ஒரு பெண் மீது அவரது உறவுகளே சரியான புரிதல் இல்லாமல் அபாண்டமாக பழி சுமத்தினால் அந்த பெண்ணின் வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக அருவி கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதை மகள் வைத்துள்ள ஒவ்வொரு தகப்பனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  அதேபோல் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இனிமேல் உயிரை கொல்லும் எய்ட்ஸ் நோயாளி மீதான பார்வை வேறு விதத்தில் இருக்கும். இன்னொறு முக்கிய விஷயம், ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் மீண்டும் அப்பெண்ணிடம் காட்டும் மனிதாபிமானமும், அந்த மனிதாபிமான அன்பை அந்த பெண் ஏற்றுக்கொள்வதும் இதுவரை நாம் கேள்விப்படாத, பார்த்திராத ஒருவிஷையமாகத்தான் பார்க்க வேண்டும்

பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அவ்வளவு அருமையாக உள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் என டெக்னிக்கல் விஷயங்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படி ஒரு படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சபாஷ். மொத்தத்தில் சமூக அக்கறையுடன் கூடிய ஒரு அருமையான படைப்புதான் இந்த அருவி

Rating : 3.8 / 5.0