நட்சத்திர வேட்பாளர் தொகுதி: தூத்துகுடி குறித்த ஒரு பார்வை

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடந்தாலும் ஒருசில தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக பார்க்கப்படும். உதாரணமாக மோடி, சோனியா காந்தி, ராகுல்காந்தி, போன்ற தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் அகில இந்திய அளவில் பேசப்படும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள நட்சத்திர தொகுதியான தூத்துகுடி குறித்து தற்போது பார்ப்போம்

தூத்துகுடியில் திமுக வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சகோதரி கனிமொழி களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டும், 2013ஆம் ஆண்டும் திமுகவின் ராஜ்யசபா உறுப்பினராக பணிபுரிந்த கனிமொழி, தற்போது முதல்முறையாக லோக்சபாவிற்கு போட்டியிடுகிறார். கடந்த ஒரு வருடமாகவே தூத்துகுடிக்கு அவர் அடிக்கடி சென்று அந்த பகுதி மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துகுடி, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தூத்துகுடி தொகுதி திமுகவின் கோட்டை என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் தூத்துகுடி மாவட்ட செயலாளராக இருந்த பெரியசாமி. இவருடைய மறைவிற்கு பின் தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அனிதா ராதாகிருஷ்ணனனும் வடக்கு மாவட்டச் செயலாளராக கீதாஜூவனும் அந்த தொகுதியில் திமுகவின் செல்வாக்கு குறையாமல் காப்பாற்றி வருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது நாடு முழுவதிலும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் மட்டும் ஜெயலலிதா அலை வீசியதால் தூத்துகுடியில் அதிமுக வேட்பாளர் ஜெய்சிங் தங்கராஜ் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது நிலைமை வேறு. ஒரு பக்கம் ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாத அதிமுக, இன்னொரு பக்கம் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளால் பலமாக இருக்கும் திமுக என்பதால் கனிமொழியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியான சம்பவம் இன்னும் அந்த பகுதி மக்களின் ஆழ்மனதில் இருப்பதால் ஆளும் அதிமுக அரசு மீது பெரும்பாலான மக்கள் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தின் அறுவடை பலனை திமுக எளிதாக பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

கனிமொழிக்கு இன்னொரு சாதகமான அம்சம் என்னவெனில் அந்த தொகுதியில் உள்ள பெரும்பான்மையான நாடார் ஓட்டுக்கள். தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துகுடி, குமரி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பது நாடார் இன ஓட்டுக்கள் தான். அந்த வகையில் கனிமொழிக்கு இந்த தொகுதி சாதகமான தொகுதி என்றே கருதப்படுகிறது

மேலும் நெல்லை, தூத்துகுடி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வைகோவின் மதிமுகவிற்கு என ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகள் உள்ளன. இந்த முறை கனிமொழிக்காக அவர் தீவிர பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதும் கனிமொழிக்கு சாதகமான மற்றொரு அம்சம் ஆகும்.

மேலும் காங்கிரஸ் கூட்டணியோ அல்லது மூன்றாவது அணியோ ஆட்சி அமைத்தால் கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தூத்துகுடி அமைச்சரின் தொகுதி என்ற பெருமை பெறவும் வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் தூத்துகுடி தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இந்த தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிசையும் நாடார் இன மக்களின் ஓட்டுக்களை கவர பெரும் முயற்சி செய்வார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. பாஜக ஒரு தேசிய கட்சி என்பதும், பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்றால் மோடிக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான தமிழிசை தங்கள் தொகுதிக்கு அதிக நன்மை செய்வார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் எழ வாய்ப்பு உள்ளது. கரைபடியாத அரசியல்வாதி குமரி அனந்தன் அவர்களின் மகள் என்ற சாதகமான அம்சமும் தமிழிசைக்கு உண்டு. அதேபோல் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு பாஜக எம்பியான பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது போல், தூத்துகுடியில் தமிழிசை வெற்றிபெற்றால் அவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது

மேலும் புதியதாக களம் காணும் கமல் கட்சி மற்றும் தினகரன் கட்சியின் வேட்பாளர்களும், அவர்கள் பிரிக்கும் வாக்குகளை பொறுத்தும் கனிமொழி, தமிழிசையின் வெற்றி மாறுபடலாம். மேலும் நடிகர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா இந்த தொகுதியில் போட்டியிடவுள்ளதாக ஒரு வதந்தி எழுந்துள்ளது. அவரும் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பதை அவர் போட்டியிடுவாரா? என்பதை உறுதி செய்த பின்னரே பார்க்கவேண்டும்

மொத்தத்தில் இந்த தொகுதியை பொருத்தவரை திமுக மற்றும் பாஜக வேட்பாளர் இடையே தான் போட்டி என்பதும், யார் வெற்றி பெற்றாலும் இந்த தொகுதி அமைச்சரின் தொகுதி என்பதாலும் தூத்துகுடி நட்சத்திர தொகுதியாகவே பார்க்கப்படுகிறது.

More News

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

திமுக தேர்தல் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் தற்போது வெளிவந்துள்ளது.

ஆமை புகுந்த வீடு! வைகோவை கலாய்க்கும் பிரபல தயாரிப்பாளர்

கடந்த சில ஆண்டுகளாகவே வைகோ உள்ள கூட்டணி வெற்றி பெறாது என்றே தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதுண்டு.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் படுசுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளை முடித்துவிட்டு

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' படத்தை தயாரித்த வேல்ஸ் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தல அஜித் பாணியில் செல்லும் த்ரிஷா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சி நடிப்பில் சுஜாய் கோஷ் நடித்த 'பாட்லா' திரைப்படம் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.