close
Choose your channels

Asuravadham Review

Review by IndiaGlitz [ Friday, June 29, 2018 • தமிழ் ]
Asuravadham Review
Banner:
Seven Screen Studios
Cast:
Sasikumar, Nandita Swetha, Vasumitra
Direction:
Marudhu Pandian
Production:
Leena Lalitkumar
Music:
Govind Menon
Movie:
Asuravadham

'அசுரவதம்': அலங்கோல வதம்

நடிகரும் இயக்குனருமான சசிகுமாரின் முந்தைய ஒருசில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் 'அசுரவதம்' படத்தை அவர் ரொம்பவே நம்பியிருந்தார். இந்த படம் தன்னுடைய பழைய மார்க்கெட்டை மீட்டு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்ததாக ரிலீசுக்கு முன்னர் கூறப்பட்டது. அவருடைய நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் இருந்ததா? சசிகுமார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

கதாநாயகன் சசிகுமார், வில்லன் வசுமித்ரவை அணுஅணுவாக சித்ரவதை செய்கிறார். சசிகுமார் ஏன் சித்ரவதை செய்கிறார், ஏன் கொலை மிரட்டல் விடுகிறார் என்பது வில்லனுக்கும் தெரியவில்லை, படம் பார்த்த நமக்கும் புரியவில்லை. கடைசியில் சில நிமிட பிளாஷ்பேக்கில் அந்த சஸ்பென்ஸை உடைக்கின்றார் இயக்குனர். அந்த சஸ்பென்ஸ் என்ன என்ற ஒருவரி கதைதான் இந்த படத்தின் கதையும்

பிளாஷ்பேக்கில் வரும் ஒருசில நிமிடங்கள் தவிர சசிகுமாரின் முகத்தில் புன்னகையோ, சிரிப்போ கிடையாது. படம் முழுக்க சீரியஸாகவே உள்ளார். வில்லனை துரத்தி நடக்கின்றார், ஓடுகிறார், அடிக்கிறார், அடி வாங்குகிறார், ஒரு பத்து பாக்கெட் சிகரெடி பிடிக்கின்றார், கடைசியில் பழிவாங்குகிறார். படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்துதான் முதல் வசனத்தையே சசிகுமார் பேசுகிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்த படத்தில் ஒருசில காட்சிகள் கூட இல்லை என்பது வருத்தமே.

நாயகி நந்திதா இடைவேளைக்கு பின்னர் தான் படத்தில் தோன்றுகிறார் அதுவும் பைத்தியமாக. அவர் ஏன் பைத்தியமாகிறார் என்பதற்கும் அந்த பிளாஷ்பேக்கில் விடை உள்ளது. இந்த படத்தில் நந்திதா நாயகியா? அல்லது கெஸ்ட் ரோலா? என்ற சந்தேகத்தை படக்குழுவினர் விளக்கினால் நன்றாக இருக்கும்

எழுத்தாளர் வசுமித்ர தான் இந்த படத்தின் வில்லன். இவர் ஏற்கனவே சசிகுமாரின் 'கிடாரி' படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. தமிழ் சினிமாவுக்கு இன்னொரு வில்லன் கிடைத்துவிட்டார் என்பது இந்த படத்தின் மூலம் உறுதியாகிறது. 'யார்ரா நீ' என்ற வசனத்தை இவர் இந்த படத்தில் நூறு முறையாவது பேசியிருப்பார். கடைசி வரை தான் ஏன் தண்டிக்கப்படுகிறோம், கொலை செய்யப்படுகிறோம் என்று தெரியாமலேயே செத்து போகிறார். இந்த படத்தின் ஒரே ஒரு உருப்படியான அம்சம் இந்த வில்லன் கேரக்டர்தான்

கோவிந்த் மேனன் இசையில் பாடல்கள் கேட்கும்படி இல்லை. பின்னணி இசை படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ப உள்ளது. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரை இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. குறிப்பாக கொடைக்கானல் அழகை திரையில் தோன்ற வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர்.

ஒரே ஒரு வரி கதையை தேர்வு செய்த இயக்குனர் அந்த கதையை நோக்கி திரைக்கதை அமைப்பதில் தோல்வி அடைந்துள்ளார். முதல் பாதியான ஒரு மணி நேரத்தில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே ஆடியன்ஸ்களுக்கு புரியவில்லை. அட்லீஸ்ட் இடைவேளையின்போது ஒரு டுவிஸ்ட் வைப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. மேலும் திரைக்கதையில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். சசிகுமார், நந்திதா வாழும் வீட்டுக்கு பக்கத்தில் தான் வில்லன் கடை வைத்துள்ளார். கத்தாரில் இருந்து வந்த 15 நாட்களில் சசிகுமாரை ஒருமுறை கூட வில்லன் பார்த்திருக்க மாட்டாரா? போலீஸ் கேட்கும்போது சசிகுமாரை இதுவரை தான் பார்த்ததே இல்லை என்கிறார். அதேபோல் சசிகுமாரை பிடிக்க ஒரு லாட்ஜில் வட்டம் போடுகிறார் போலீஸ் அதிகாரி. இந்த வட்டத்துக்குள் அவன் வந்தால் உயிரோடு போக முடியாது, நம்ம பசங்க கண்டதுண்டமா வெட்டிருவாங்க' என்கிறார். ஆனால் சசிகுமார் வந்து பிடிபட்டதும் இங்கே கொல்ல வேண்டாம், பிரச்சனை ஆகிவிடும் வெளியே போய் கொல்லலாம் என்று கூறுகிறார். இதுபோல் படத்தில் பல முரண்பாடுகள். மொத்தத்தில் இயக்குனர் மருதுபாண்டியன் படம் பார்த்தவர்களை வதம் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்

சசிகுமாரின் முந்தைய படங்கள் மீதான மரியாதை காரணமாக ரேட்டிங் ரத்து செய்யப்படுகிறது.

Rating: 2.5 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE