ஆப்கனில் துப்பாக்கிச்சூடு, அதிகரிக்கும் பதற்றம்… இந்தியர்களின் நிலை என்ன?

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்து உள்ளனர். இதையடுத்து ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தாலிபான்கள் நேற்று காபூலை நெருங்கியபோது ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து விடுவதாக அந்நாட்டு அதிபர் அஷ்ரப்கானி தெரிவித்து இருந்தார். தற்போது அதிபர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டாலும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் அமைதியான முறையில் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தாலிபான்கள் மூடியுள்ளனர். மேலும் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக அந்த இடத்தில் தாலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியபோதே பல உலக நாடுகள் அங்குள்ள தங்களது தூதரகத்தை மூடிவிட்டன. இந்நிலையில் இந்தியாவும் தனது தூதரத்தை மூடிவிட்டு அதிகாரிகளை திரும்பப் பெற்றுக்கொண்டது. அந்த வகையில் நேற்று ஏர் இந்திய விமானம் மூலம் 129 பயணிகள் பத்திரமாக இந்தியா திரும்பினர். ஆனால் இன்னும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஆப்கனில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தற்போது தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் விலகியதை அடுத்து தாலிபான்கள் தற்போது ஆப்கனை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலைமைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன்தான் காரணம் என்றும் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானை கைவிட்டு விட்டதாகவும் கூறி தற்போது வெள்ளை மாளிகை அருகே போராட்டம் வெடித்து வருகிறது.

இதற்கிடையில் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தற்போது தாலிபான்கள் மூடியுள்ளனர். இதனால் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டவர்களையும் செல்வதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதிக்க வேண்டும் என்று தாலிபான்களிடம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 60 நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆப்கனில் ஏற்பட்டு இருக்கும் அவசர நிலையைக் குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.