Download App

Attu Review

சென்னைத் தமிழில் பல வார்த்தைகளுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. அதுபோல்‘அட்டு’ என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் பொது புத்தியில் அவ்வார்த்தைக்கு மோசமானது, மட்டமானது என்ற அர்த்தங்களே பரவியுள்ளன. எனவே இந்தத் தலைப்புடன் ஒரு படத்தை எடுத்திருப்பதே அறிமுக இயக்குனர் ரத்தன் லிங்காவின் துணிச்சலான  முயற்சிதான். 

வட சென்னையில் குப்பைமேடுகளிலும் குப்பை நிறைந்த பகுதிகளிலும் வாழ்ப்வர்களின் கதைதான் ‘அட்டு’.

அனாதைசகளான அட்டு (ரிஷி ரித்விக்) மற்றும் அவனுடைய நான்கு நண்பர்கள் குப்பை மேடு ஒன்றில் வாழ்கிறார்கள். சிறுவயதிலிருந்தே பிழைப்புக்காக, ஏரியா ரவுடி தாஸ் (ராஜசேகர்) என்பவனின் குற்றச் செயல்களுக்கு உதவியாக இருந்து ஈடுபட்டு இவர்களுகும் ரவுடிகளாக வளர்கிறார்கள். தாஸ் செல்வாக்கு பெற்ற மனிதனாக உருவெடுத்தவுடன் இவர்கள் அவனது அடியாட்கள் போல் வலம்வருகிறார்கள். 

அந்த பகுதியில் வசிக்கும் சுந்தரி (அர்ச்சனா ரவி) பருவ வயதில் சில கயவர்களிடமிருந்து அட்டுவால் காப்பாற்றப்பட்டவள் என்பதால் அவன் மீது காதல்கொள்கிறாள். சிறிது தயக்கத்துக்குப் பின் அவளது காதலை ஏற்கிறான் அட்டு. ஆனால் சுந்தரியின் அப்பா இந்தக் காதலை எதிர்க்கிறார். 

பக்கத்து ஏரியாவில் இருக்கும் ஜெயா (தீனா) போதைமருந்துப் பொடியை விற்கும் தொழிலில் ஈடுபடுகிறான். அவனுக்கும் அட்டு குழுவினருக்கும் சின்னச் சின்ன மோதல்கள் நடக்கின்றன. ஒரு முறை ஜெயாவின் இடத்தில் போல்ஸீ செய்டு நடக்க அவனுக்கு சொந்தமான போதைப் பொருட்கள் அட்டு இருக்கும் இடத்தில் வந்து சேர்கின்றன. அட்டுவிடமிருந்து தனது பொருட்களை மீட்க அவனைக் கொல்லத் திட்டமிடுகிறான் ஜெயா. 

இதனால் ஏற்படும் குழப்பங்களில், ஒரு செல்வாக்கு மிக்க நபரைக் கொன்றுவிடுகிறான் அட்டு. போலிஸாரிடம் சிக்காமல் இருக்க அட்டுவு அவனது நண்பர்களும் தலைமறைவாக வாழ்கின்றனர். 

அவர்கள் காவல்துறை நடவடிக்கையிலிருந்து தப்பித்தார்களா, அதற்குப் பின் அவர்களது வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் என்னென்ன என்பவையே மீதித் திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளன. 

வடசென்னை பற்றி அண்மைக் காலங்களில் பல படங்கள் வரத் தொடங்கிவிட்டாலும் அங்குள்ள குப்பை மேடுகளில் வாழும் மனிதர்களை அவர்களது வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் முதல் படம் ‘அட்டு’. அப்பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை-திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் இயக்குனர். 

சிறுவயதிலிருந்து ரவுடிகளாக வளர்ந்தவர்களின் வழக்கமான கதைதான் என்றாலும் பெருமளவில் பார்வையாளர்களின் கவனத்தை சிதறடிக்காத திரைக்கதை, கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் யதார்த்தமான சித்தரிப்பு ஆகியவற்றால் தனித்து நின்று ஈர்க்கிறது ‘அட்டு’. இடம், சூழல் பாத்திரங்கள் ஆகியவற்றை சித்தரித்த விதம்,  விவரணைகள் மற்றும் வசனங்கள்  இயக்குனரின் ஆய்வுப்பூர்வமான உழைப்பைப் பறைசாற்றுகின்றன.  குப்பை நிரம்பிய பகுதிகள், மழிக்கப்படாத முகங்கள், அழுக்கடர்ந்த உடைகள், தெறிக்கும் ரத்தம் என வளர்ந்து விட்ட பெருநகரமாகிய சென்னையின் சில பகுதிகளும் அங்கு வாழும் மக்களும் எப்படி இருக்கிறார்கள் என்ற உண்மை முகத்தில் அறைகிறது. 

ஆனால் கதையில் புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் எதுவும் இல்லை. இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மேல் நீள கதையில் வலுவில்லை என்பது காதல் காட்சிகளுக்கும், நகைச்சுவை காட்சிகளுக்கும்  அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிப்படுகிறது.  

நாயகன் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கிடையிலான நட்பை சித்தரித்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது.   கூட்டாளிகளில் ஒருவராக வரும் யோகிபாபு பல இடங்களில் சிரிக்க வைத்து முதல் பாதியை கலகலப்பாக நகர்த்திச் செல்ல உதவுகிறார். நாயகனும் நாயகியும் அசலான மண்ணின் மனிதர்களாக இருப்பதைத் தவிர  காதல் காட்சிகளில் சொல்லிக்கொள்ளும்படி வேறு ஒன்றும் இல்லை. கமர்ஷியல் என்ற பெயரில் இரண்டாம் பாதியில் ஒரு ஐட்டம் பாடல் திணிக்கப்பட்டுள்ளது.  

திடீரென்று சில பாத்திரங்கள் துரோகிகளாக மாறும்போது ஏற்பட வேண்டிய அதிர்ச்சி, அவற்றை நாம் முன்பே எதிர்பார்த்துவிடுவதால் இல்லாமல் ஆகிறது.  இறுதி காட்சியும் அப்போது நடக்கும் சண்டையும் ஒரு வகையில் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அது அளவுக்கதிகமாக நீள்வதும், நாயகி பாத்திரத்துக்கு தரப்பட்டுள்ள முடிவு திணிக்கப்பட்டது போன்ற உணர்வும், படத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தைக் குறைக்கின்றன. 

ரிஷி ரித்விக் வடசென்னையில் குப்பைமேட்டில் வளரும் ரவுடி பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சண்டைக் காட்சியில் பெரிதும் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். குறிப்பாக கத்தியை லாவகமாக சுழற்றும் இடங்களில் ரசிக்கவைக்கிறார். ஆனால் ஒரு நடிகராக நிலைபெற வசன உச்சரிப்பிலும் முக பாவங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  

நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவியின் தோற்றமும் உடைகளும் வடசென்னைப் பகுதியில் வாழும் பெண்ணைக் கண்முன் நிறுத்துகின்றன. நடிப்பிலும் குறைவைக்கவில்லை.

யோகிபாபு சிரிக்கவைக்கும் பணியை செவ்வனே செய்கிறார். நாயகனின் மற்றொரு நண்பனாக வரும் பிரபா கலவையான குணங்கள் கொண்ட பாத்திரத்தில் நன்கு நடித்திருக்கிறார். தீனா தொடர்ந்து ரவுடியாகவே நடித்துக்கொண்டிருந்தாலும் இந்த முறையும் ஈர்க்கத் தவறவில்லை. 

போபோ ஸ்ரீயின் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை காட்சிகளின் சூழல்களுக்கும் சிறப்பாகப் பொருந்துகிறது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கமும், . கலை இயக்குனர் சுரேஷ் காலரியும்  கதை நடக்கும் இடத்துக்கு பார்வையாளரைக் கொண்டுசெல்வதில் தக்க துணை புரிந்துள்ளார்கள். பவர் பாண்டியன் ஆசான் வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் அசலாகவும் அழுத்தமாகவும் உள்ளன. 

வழக்கமான கதை என்றாலும் பெருமளவில் கவனத்தை தக்கவைக்கும் திரைக்கதை அசலான சித்தரிப்புகள் ஆகியவற்றுக்காக ’அட்டு’ படத்தை ஒரு முறை பார்க்கலாம். 

Rating : 2.5 / 5.0