Download App

Baahubali 2 Review

இந்திய சினிமாவில் முதல்முறையாக முதல் பாகப் படத்தில் முழுக் கதையைச் சொல்லாமல் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியுடன் ’பாகுபலி’ படத்தை முடித்த துணிச்சல்காரர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி. இந்தக் கேள்விக்கான பதிலையும் மீதிக் கதையையும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இந்திய சினிமா ரசிகர்களை கடந்த இரண்டாண்டுகளாக ஆவலுடன் காக்க வைத்தார். இதோ இன்று வெளியாகியுள்ள   ‘பாகுபலி 2’ படத்தில் கேள்விக்கான விடையும் கிடைத்துவிட்டது, முழுமையான பாகுபலி கதையும் கிடைத்துவிட்டது திருப்திகரமாக! சிறப்பாக! எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமாக.!

மகிழ்மதிப் பேரரசின் அடிமை வீரர் கட்டப்பா (சத்யராஜ்), அமரேந்திர பாகுபலியிடம் (பிரபாஸ்), அவனது தந்தை மகேந்திர பாகுபலியை (பிரபாஸ்) தான் கொன்றதைச் சொல்வதோடு முதல் பாகம் முடிந்தபோது நமக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடைகளைச் சொவ்லதே இரண்டாம் பாகத்தின் கதை . பாகுபலி அரசனான பின் என்ன ஆனது, அவன் எப்படி தேவசேனாவை மணந்தான். தேவசேனா ஏன் சிறைபிடிக்கபப்ட்டாள், கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பதோடு, கொலைககான காரணத்தை அறிந்தபின் அமரேந்திர பாகுபலி தன் தந்தையைக் கொன்று தாயை சிறைபிடித்தவர்களைப் பழிதீர்த்து அரியணை ஏறும் கதையைச் சொல்கிறது ‘பாகுபலி 2’.

படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பிரம்மாண்டம் விரவிக் கிடக்கிறது. ராஜாமாதாவை ஒரு த யானையை அடக்கி அவரைக் காப்பாற்றும் பாகுபலியின் அறிமுகக் காட்சியே ஆச்சரியத்தில் மலைக்க வைக்கிறது.

அங்கிருந்து தொடங்கும் பிரம்மாண்டமும் மலைக்க வைக்கும் காட்சிகளும் படத்தின் முடிவு வரை தொடர்கின்றன. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் கதை வலுமிக்கதாக உள்ளது. சுவாரஸ்ய முடிச்சுகளும் கதாபாத்திரங்களுக்கிடையிலான முரண்களும் நிறைந்த திரைக்கதையும் உள்ளது. இவை இரண்டாம் பாகத்தை மேலும் சிறப்பான படமாக்குகின்றன.

முதல் பாதியில் தொடக்கக் காட்சிகளில் கொஞ்சம் நகைச்சுவைக்கு இடம்கொடுத்திருக்கிறார்கள். அதைவிட ஆச்சர்யம் அந்தக் காட்சிகளுக்கு  சத்யராஜ் பயன்படுத்தப்பட்டிருப்பது. நகைச்சுவை அதிரி புதிரி நகைச்சுவை இல்லை என்றாலும் ஆங்காங்கே சிரிக்க முடிகிறது. இவற்றுக்கிடையே வரும் இரண்டு காதல் பாடல்கள் சற்றே இடைச் செறுகல்போல் தோன்றினாலும் பொறுமையை சோதிக்கவில்லை. 

மகிழ்மதி பேரரசிலிருந்து தேவசேனையைப் பெண்கேட்டனுப்பும் காட்சியிலிருந்து சூடுபிடிக்கத் தொடங்கும் படம் இடைவேளை வரை ஒரு கணம்கூட கவனம் சிதறவிடாமல் நகர்கிறது. சிற்றரசின் மீது கொள்ளையர்கள் போர்தொடுக்க, அதை பாகுபலியும், தேவசேனையும் இணைந்து முறியடிக்கும் போர்க்காட்சி,  ’பாகுபலி’ முதல் பாகத்தின் போர்க்காட்சியைப் போலவே சிந்தனையிலும் படமாக்கத்திலும் உலகத்தரமான பிரம்மாண்டத்துடன் இருக்கின்றன.

அதேபோல் இடைவேளையை ஒட்டி வரும் பட்டாபிஷேகக் காட்சி பிரமித்தக்க விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.  வசனங்களும் பாத்திரங்களின் நடிப்பும் அந்தக் காட்சியை மேலும் சிறப்பாக்குகின்றன. இந்திய சினிமா வரலாற்றின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி என்று சொன்னால் மிகையில்லை.
படத்தின் முதல் பாதியே ஒரு முழுப் படம் பார்த்த திருப்தியைத் தந்துவிடுகிறது. அதிலேயே ஒரு முழுக் கதை இருக்கிறது. இது படத்தின் மற்றுமொரு சிறப்பு.

இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகளுக்கு அதிக ஸ்கோப். எமோஷன்கள் கச்சிதமாகவும் சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன. பாகுபலியைக் கட்டப்பா கொல்வதற்கான காரணமும் அது சித்தரிக்கப்பட்ட விதமும் ஏற்கத்தக்கதாகவும் இந்தக் கேள்வியின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏமாற்றாத விதத்திலும் அமைந்திருக்கின்றன.
 
அதற்குப் பின் நடக்கும் இறுதிப் போர்க்காட்சி சற்றே மிக நீளமாக இருப்பதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் முதல் பாகத்தின் இறுதிப் போர்க்காட்சியைப் போலவே இதிலும் பயன்படுத்தப்படும் போர் உத்திகளும் வடிவமைப்பும் பிரம்மாண்டத்துக்கு புது இலக்கணம் வகுப்பதாக உள்ளன. அந்த வகையில் ‘பாகுபலி’ ரசிகர்களுக்கு முழுத் திருப்தி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

குறைகள் என்று சொல்வதென்றால் இரண்டாம் பாதியில் கடைசி அரைமணிநேரக் காட்சிகளைக் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம் என்று தோன்றுவதைத் தவிர வேறெதுவும் பெரிதாக சொல்வதற்கில்லை. போர்க்காட்சிகளில்  அளவுகடந்த சூப்பர்ஹீரோயிசம் இருப்பதாக  சிலருக்குத் தோன்றலாம் . ஆனால் இது ஒரு ஃபேண்டசி கலந்த அரசர்காலத்துப் படம் என்பதும், பாகுபலியும், பால்வளத் தேவனும் மிகப் பெரும் பலசாலிகள் என்பதும் முதல் பாகத்திலேயே நம் மனதுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டதால் அவை பெரிய குறைகளாகத் தெரிய வாய்ப்பில்லை. 

பிரபாஸின் ஐந்து வருட உழைப்பும் அர்ப்பணிப்பும் துளியும் வீண்போகவில்லை.  முதல் பாதியில் காதலையும் வீரத்தையும் காட்டியவர் இந்தப் பாகத்தில் அவை இரண்டோடு எமோஷன்களையும் அதிகமாகக் கையாள வேண்டிய சவாலை மிகச் சிறப்பாக நிறைவெற்றியுள்ளார். ராஜமாதா மீது அன்பு கலந்த மரியாதையையும் , கட்டப்பாவிடம் பரிவையும் தேவசேனையிடம் காதலையும் கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். அவரது உடலமைப்பு பிரமிக்கவைக்கிறது. சண்டைக் காட்சிகள் துளிகூட சினிமாத்தனமாக இருப்பதாக நமக்குத் தோன்றாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அவரது உடலமைப்பும் உழைப்பும்தான் என்று சொன்னால் மிகையில்லை.

அனுஷ்காவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். வீரமும் துணிச்சலும் சுயமரியாதையும் அற உணர்வும் மிக்க நாயகி பாத்திரத்தை இப்படி ஒரு படத்தில் வைத்ததே பாராட்டத்தக்க முடிவு. அவை அனைத்தையும் தன் நடிப்புத் திறமையால் சிறப்பாக் கையாண்டு மனதில் இடம்பிடிக்கிறார் அனுஷ்கா.

முதல் பாகத்தில் தோற்றத்திலும் உடல்மொழியிலும் கம்பீரத்தைக் கொண்டுவந்து நம்மை வியகக்வைத்த  ரம்யா கிருஷ்ணன் இரண்டாம் பாகத்தில் இவற்றையெல்லாம் இன்னும் அதிகமாகவும் வலிமையுடனும் வெளிப்படுத்தும் வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தி பிரமிக்க வைக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் நடிப்பில் குறைவைக்கவில்லை.

சத்யராஜ் முதல் பாதியில் நகைச்சுவை நடிப்பிலும் இரண்டாம் பாதியில் எமோஷனல் நடிப்பிலும் ஈர்க்கிறார். போர்க்காட்சிகளில் ஒரு இளம் நடிகருக்கு சவால் விடும் அளவுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.

ராணா தோற்றத்தில் மிரட்டுகிறார். நடிப்பதற்குப் பெரிய அளவில் வாய்ப்பில்லை. கொடுத்த வேலையைக் குறையின்றிச் செய்திருக்கிறார். முதல் பாகத்தைவிட அதிக வலுவான பாத்திரத்தைப் பெற்றிருக்கும் நாசர் வழக்கம்போல் தன் அனுபவ நடிப்பால் முத்திரை பதிக்கிறார். தமன்னா ஒரு சில காட்சிகளில் வந்துபோவதோடு சரி.

கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இதமாக இருப்பதோடு சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இடைவேளைக்கு முன்பு வரும் பாய்மரக் கப்பல் பாடல் காட்சி அற்புதமாக உள்ளது. பின்னணி இசை சில இடங்களில் கவனிக்க வைத்தாலும் ஒட்டுமொத்தமாக இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

மதன் கார்க்கி வசனங்களில் அசத்தியிருக்கிறார். படைகளின் பெயர்களும் அரச குலம் தொடர்பான வார்த்தைப் பிரயோகங்களும் தமிழ் சூழலுக்கு பொருத்தமாக உள்ளன. அதோடு பல இடங்களில அர்த்தம் நிறைந்த அழுத்தமான வசனங்களை எழுதியுள்ளார் குறிப்பாக “உயிரைக் கொடுப்பவன் தேவன், உயிரை நீட்டிப்பவன் வைத்தியன், உயிரைக் காப்பவன் ஷத்ரியன்” என்ற வசனத்தின் தாக்கம் படம் முடிந்த நீண்ட நேரம் ஆன பின்னும் நினைவில் நிற்கிறது. இதுபோல பல வசனங்கள் படத்தில் உள்ளன. . அதே நேரத்தில் பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்ட நடிகர்களுக்கான உதட்டசைவு பொருத்தமில்லாமல் இருப்பது சில இடங்களில் உறுத்துகிறது.

செந்தில்குமாரின் ஒளிப்பதிவு முதல் பாகத்தைப் போலவே சிறப்பாக உள்ளது. குறிப்பாக லொகேஷன்கள் மாறும்போது கேமரா நகரும் விதத்திலேயே  கதை சொல்ல முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவின் படத்தொகுப்பு கதையில் பார்வையாளரின் கவனத்தை சிதறடிக்காத வகையில் அமைந்துள்ளது. கலை இயக்குனர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் அரண்மனைகள், பெரிய யானை வடிவிலான நீரூற்று, போருக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என அனைத்தும் பிரம்மாண்டத்துக்கு கட்டியம்கூறுகின்றன. பீட்டர் ஹெய்ன் வடிவமைத்துள்ள சண்டைக் காட்சிகள் படத்துக்கு மிகப் பெரும் பலம். கமலக்கண்ணன் குழுவினரின் கிராபிக்ஸ் காட்சிகள் தொடக்கக் காட்சிகளில் கொஞ்சம்  செயற்கைத்தன்மையுடன் இருந்தாலும்  அதற்குப் பிறகு அந்தக் குறை நீங்கிவிடுகிறது.

மொத்தத்தில் ‘பாகுபலி’ முதல் பாகத்தின் மூலம் இந்திய சினிமாவின் தரத்தையும், பிரம்மாண்டத்தின் அளவையும் வியாபார சாத்தியங்களையும் பல மடங்கு உயர்த்திய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இரண்டாம் பாகத்தின் மூலம் அவற்றை மீண்டும் சாதித்திருக்கிறார்.  இந்திய சினிமா வில், அரசர் காலத்துக் கதைகளைக் கையாள்வது, ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களில் படங்களை எடுப்பது, காட்சிகளின் பிரம்மாண்டம், படத்துக்கான செலவு, படத்தின் வியபாரம் என பல்வேறு விஷயங்களில் புதிய சாத்தியங்களைத் திறந்துவிட்டுள்ளது ‘பாகுபலி .  அதன் இரண்டு பாகங்களும் இதனாலேயே, வரலாற்றில் தனி இடம் பிடிக்கப் போகின்றன .  அதற்கான முழுமுதற்பெருமை இயக்குனர் ராஜமெளலியையே சேரும்.

Rating : 4.0 / 5.0