ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சியா? பிசிசிஐ என்ன சொல்கிறது?

டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு இந்திய குறைந்த ஓவர் கிரிக்கெட் அணிக்கு அதாவது ஒருநாள், டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்க வாய்ப்பு இருக்கிறது என ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

இதையடுத்து விராட் கோலியே தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவார், அவர் கிரிக்கெட்டில் தனது ஃபார்மை மீண்டும் கொண்டு வருவதற்காக இந்த முடிவை எடுப்பார் என்பது போன்ற கருத்துகளை ஒரு தரப்பும், பிசிசிஐ ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க இருக்கிறது என மற்றொரு தரப்பும் தகவல் வெளியிட்டு வந்தன.

காரணம் கோலி கேப்டன்ஷியில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. அதோடு அணித்தேர்வு முறையில் கோலி சொதப்புகிறார் என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் அவரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ரோஹித் சர்மா, கோலி இல்லாதபோது குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறந்த கேப்டன்ஷியை காட்டி இந்திய அணிக்குப் பல வெற்றிகளை குவித்துள்ளார். அதில் இலங்கையில் நடந்த நிதாகஸ் டிராபி போட்டியும் ஒன்று.

விராட் கோலி குறித்து ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் சமயத்தில் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளார். மேலும் “பிசிசிஐ ஒருநாளும் கேப்டன்சியை பிரித்துக் கொடுப்பது பற்றி கூட்டம் நடத்தவில்லை. இதைப்பற்றி பேசவும் இல்லை. விராட் கோலிதான் அனைத்து வடிவத்துக்கும் கேப்டனாக இருப்பார்“ என்று தகவல் வெளியிட்டு உள்ளார்.