close
Choose your channels

10 வருடங்களுக்கு முன்பே பாவனாவின் கொடுமையை அனுபவித்த பிரபல பெண் இயக்குனர்

Friday, February 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை பாவனா கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் பாவனா தைரியமாக முன்வந்து போலீஸ் புகார் கொடுத்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர். நடிகை என்பவர் வெளியாட்கள் மட்டுமின்றி திரைத்துறையில் உள்ளவர்களாலும் தொல்லைக்குட்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்தாலும், இந்த விஷயத்தை எந்த நடிகையும் வெளியில் சொல்வதில்லை என்பது தான் உண்மை. பூனைக்கு யார் மணிகட்டுவது என்று பிரபலமானவர்களே தயங்கிய நிலையில் முதல்முறையாக பாவனா தைரியமாக முன்வந்து புகார் கொடுத்துள்ளது மற்ற நடிகைகளுக்கு ஒரு ஆறுதலாக உள்ளது.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பாவனாவிற்கு ஏற்பட்ட இதேபோன்ற ஒரு பாலியல் துன்பத்தை தான் அனுபவித்ததாகவும், ஆனால் பயம் காரணமாக அதை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டதாகவும் பிரபல பெண் எழுத்தாளர், இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தற்போது பாவனாவின் தைரியத்தால் தனக்கும் தைரியம் கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து கூறியது இதுதான்:

2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது. "வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்" என்று சொன்ன "இயக்குநரை" நம்பி காரில் ஏறினேன். ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன். சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது.

என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரி காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநர் பொறுக்கியை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலை திருப்பித் தர வைத்தது. இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமானவர்களிடம் சொல்வதற்கு கூட தைரியமில்லை. ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வை காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிட சொல்வார்கள் என்று அச்சம். "நோ" சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த "இயக்குநர்" என் பெயரைக் களங்கப் படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு. எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று.

பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத் தான் இருக்கிறது. இன்று நடிகர் பாவனாவுக்கு நிகழ்ந்த அநியாயத்திற்காக திரைத்துறை "ஹீரோக்களும்""இயக்குநர்களும்" "குரல்" கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லது. அப்படியே தங்களையும் தங்கள் படைப்புகளில் இருக்கும் பெண் வெறுப்பையும் பரிசீலனை செய்ய வேண்டும். சுட்டு விரலை உள்பக்கமாக இவர்கள் திருப்ப வேண்டும். "ஆண்மை" தானே இந்த ஊரில் "ஹீரோயிஸம்"? தன் மேல் விழ நேரிடும் நூறாயிரம் கேள்விகளுக்கும், பார்வைகளுக்கும் அஞ்சாமல், நடந்ததை வெளியில் சொல்லி சட்டத்தை நாடியிருக்கும் பாவனாவின் தோளோடு தோள் நிற்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.