close
Choose your channels

நீட் விலக்கு சட்ட மசோதா நிறைவேற்றம்… எதிர்க்கட்சி ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Monday, September 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருத்துவப் படிப்புக்கு (MBBS) எழுத வேண்டிய நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் “நீட் விலக்கு சட்ட முன்வடிவு“ தமிழகச் சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேறியது. இந்த நீட் தேர்வு விலக்குக்கு திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாஜக எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று நீட் தேர்வு பயத்தினால் “தனுஷ்” எனும் மாணவர் உயிரிழந்தார். இதேபோன்று தமிழகத்தில் பல்வேறு தற்கொலைகள் நடைபெற்று இருக்கின்றன. அதோடு மருத்துவப் படிப்புகளில் ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அந்த வகையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் விலக்கு சட்ட முன்வடிவு சட்டமசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தமிழக முதல்வர், நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மாணவர் சேர்க்கையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை எனும் முழுமையான சட்ட முன்வடிவை முன்மொழிவதாக கூறினார்.

இந்த முன்வடிவு மீதான விவாதம் நடைபெற்றபோது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்போராட்டம் நடத்தி ஜெயலலிதா தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற அனுமதிக்கவில்லை என்றும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக தொடர்ந்து கடந்த ஆட்சியில் மத்திய அரசை வலியுறுத்தினோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து மாநில அரசு சட்டம் நிறைவேற்ற முடியுமா? என்பது குறித்து அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதோடு தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்ட முன்வடிவை அதிமுக வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நீட் விலக்கு சட்ட முன்வடிவை வரவேற்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் அரசியல் பாகுபாடு பார்க்காமல் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தீர்மானம் கொண்டுவந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த நாங்கள் ஆதரித்தோம். இன்று நீட் தேர்வால் பல இடங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான இந்த சட்ட முன்வடிவை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் “கூட்டணி கட்சியின் முடிவு வேறு. எங்கள் முடிவு வேறு என்று தெரிவித்ததோடு நீட் தேர்வை எழுதிய 99 ஆயிரம் பேரில் 56 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர், எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதைவிட 15 மாணவர்கள் இந்த தேர்வால் உயிரிழந்துள்ளனர். அதைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். இதனால் பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து முதலமைச்சர் கொண்டுவந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவு மசோதா ஒருமனதாக நிறைவேறியது என சபாநாயகர் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.