close
Choose your channels

இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று (23 ஜனவரி, 1897)

Thursday, January 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் இன்று (23 ஜனவரி, 1897)

 

இந்தியாவின் சாகச போர் வீரன், எப்போதும் அழியா சரித்திரம், ஆங்கில ஏகாதியபத்தியத்திற்கு ஒரு பெரிய தலைவலி, வீரத்தின் அடையாளமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. வரலாறு ஒவ்வொரு தலைவனையும் அவனது பிறப்பு, இறப்பு நாட்களில் நினைவு கொள்வது மிகவும் சாதாரணமான ஒரு நிகழ்ச்சி தான். ஆனால் இந்திய வரலாற்றில் நேதாஜியின் நினைவு இந்திய விடுதலை சரித்திரத்தோடு தொடர்புடையது.

இந்தியாவில் ஒரு தலைவனை நினைவு கூறும்போதும் அவனது சாதி, கொள்கை, சித்தாந்தம் போன்றவை எப்போதும் சேர்த்தே பேசப்படுகின்றன. ஏனெனில் இந்திய வரலாற்றில் தலைவர்களின் சாதனைகளை ஒவ்வொரு பிரிவினரும் கூறுபோட்டு பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். ஆனால் நோதாஜியின் சாதனைகளை எந்த ஒரு அடையாளச் சிமிழுக்குள்ளும் அடக்க முடியாது என்பதே சிறப்புக்கு உரியது. ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தேவைப்படுகின்ற வீரத்தின் சின்னமாகவே நேதாஜி கருதப்படுகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்பும் கூட இந்திய சுதந்திரத்தின் எழுச்சியினை/ உணர்வினை நேதாஜி என்ற ஒற்றை படத்தில் இருந்து மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள முடியும். ஏனெனில் நேதாஜி தன் முழு வாழ்க்கையும் இந்திய சுதந்திரத்திற்காகவே செலவிட்டு இருக்கிறார்.

நேதாஜியின் பிறப்பு/ கல்வி

ஒரிசா மாநிலத்தில் கட்டாக் பகுதியில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி செல்வ செழிப்பு மிக்க ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் வங்கதேசத்தின் போர் படை, நிதி துறைகளில் பணியாற்றிய பாரம்பரிய மிக்கது என்பதே நேதாஜியின் பின்னாளைய சுதந்திரத் தாகத்துக்கு காரணம் எனலாம். 8 குழந்தைகளுக்குப் பிறகு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த நேதாஜி தனது சிறு வயது முதலே சமூக நிகழ்வுகளில் தனிக் கவனம் செலுத்துபவராக இருந்தார்.

நேதாஜி தனது ஆரம்பக் கல்வியைக் கட்டாகிலும் கொல்கத்தாவில் உயர் கல்வியையும் பயின்றார். தனது இளமை பருவத்தில் எதிலும் ஆர்வம் இல்லாதவராகவே இருந்தார். துறவியாகச் சென்று விடவும் யோசித்தார். பல நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறி ஞான வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முயற்சி செய்தார். இறுதியில் தனது மானசீக குருவாக விவேகானந்தரை ஏற்றுக் கொண்டார். நேதாஜிக்கு எப்போதும் ஒரு முடிவடையாத தேடல் இருந்து கொண்டே இருந்தது எனலாம்.

நேதாஜியின் இத்தகைய ஆன்ம, சுதந்திர சிந்தனைக்கு அன்றைய இந்தியாவின் அரசியல், சமூகச் சூழலும் ஒரு முக்கிய காரணம் எனலாம். ஏனெனில் மதப் பின்னணியில் இருந்து தான் அன்றைக்கு இந்தியாவில் சுதந்திர எழுச்சிகள் கிளம்பின. சுதந்திரத்திற்கான உத்வேகத்தினை ஆன்மீகக் குருக்கள் ஏற்படுத்தியதோடு, சுதந்திரப் போராட்டங்களிலும் முக்கியப் பங்கு வகித்தனர். இத்தகைய நிலைமைகள் நேதாஜியை ஆன்மீகம் மற்றும் நாடு விடுதலை என்ற இரண்டு தளங்களுக்கும் ஊசலாட வைத்தது.

பின்னர் கொல்கத்தா பிரசிடெண்சி கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினைத் தொடங்கினார். அந்த சமயங்களில் தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு காட்டிஷ் சர்ச் கல்லூரியில் 1919 இல் தனது இளங்கலை படிப்பை முடித்தார். கல்லூரி காலங்களிலேயே படைப்பயிற்சியில் மிகவும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

நேதாஜியின் தீவிர அரசியல் செயல்பாடுகளை விரும்பாத அவரது தந்தை லண்டனில் ஐசிஎஸ் பயில்வதற்காக இவரை அனுப்பி வைத்தார். படிப்பைத் தொடர்ந்த இவர் 1920 இல் லண்டனில் நடைபெற்ற இந்திய மக்கள் சேவைக்கான நுழைவுத் தேர்வில் நான்காவதாக தேர்ச்சி அடைந்தார். பெரிய பணியில் தேர்ச்சி பெற்றாலும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் பணியாற்றுவதை அவர் விரும்ப வில்லை. எனவே தனது பணியினைத் துச்சமாக மதித்து விலகினார்.

சி.ஆர். தாஸ் உடன் தொடர்பு

 சி.ஆர். தாஸ் எனப்படுகின்ற சித்தரஞ்சன் தாஸ் நேதாஜியின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பவர். வழக்கறிஞராக பணியாற்றிக்கொண்டிருந்த சி.ஆர். தாஸ் தனது பணியை விட்டுவிட்டு காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி இருந்தார்.

இலண்டனில் இருந்த நேதாஜி, சி.ஆர். தாஸை கடிதம் மூலம் தொடர்பு கொண்டார். அதில் தான் மக்கள் சேவைக்கான பணியில் இருந்து விலகி விட்டதாகவும் இந்திய விடுதலைக்காக சி.ஆர் தாஸ் உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். உடனே இதற்கு இசைவினையும் தெரிவித்து பெரும்பாலான நேரங்களில் தன்னுடனேயே வைத்துக் கொண்டார் சி.ஆர். தாஸ்.  முதலில் சி.ஆர். தாஸால் 1925 இல் தேசிய கல்லூரியின் தலைவராக நியமிக்கப்பட்டார் நேதாஜி.

காந்தியடிகளுடன் முரண்பாடு

போர்க்குணம், அஹிம்சை என்ற முரண்பட்ட இரண்டு தளங்களில் பயணப்பட்டவர்களாக நேதாஜியும் காந்தியும் இருந்திருக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தியை , நேதாஜி 1921 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் சந்தித்து உரையாடினார். காந்தியடிகளின் விடுதலை இயக்கத்தில் பல நேரங்களில் நேதாஜிக்கு இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் நேதாஜி சி.ஆர். தாஸ் உடன் பணியாற்றுவதையே விரும்பினார்.

1922 இல் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த வேலஸ் இளவரசரின் வருகையினை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார் காந்தியடிகள். இந்தியாவிற்கு சுயாட்சி அளிக்க மறுத்து, தொடர்ந்து தனது அரசை வலுப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறது எனக் குற்றச்சாட்டுகள் அன்றைக்கு ஆங்கில அரசாங்கத்தின் மீது வைக்கப் பட்டன.  அப்போது இந்தப் போராட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட  தொண்டர் படையின் தலைவராக நேதாஜி நியமிக்கப் பட்டிருந்தார். ஆங்கில அரசு பொதுக் கூட்டங்களை நடத்தவும் போராட்டங்களை நடத்தவும் தடை விதித் திருந்தது. இதனையும் பொருட் படுத்தாது போராட்டங்களில் நேதாஜி ஈடுபட்டார். எனவே அரசிற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டார் போன்ற காரணங்களைக் கூறி 6 மாத காலம் நேதாஜியை சிறையில் அடைந்தது அன்றைய ஆங்கில அரசு.

நாடு முழுவதும் வேல்ஸ் இளவரசரின் வருகையை ஒட்டி நடைபெற்ற போராட்டத்தில் நேரு, சி.ஆர். தாஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும் தலைவர்களின் கைதினை மக்கள் எதிர்க்கவே அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 1922 இல் சிறையில் இருந்து வெளியே வந்த நேதாஜி காங்கிரஸின் மகாசபைக்கு தலைவரானார்.

அப்போது இந்திய சட்ட சபை தேர்தலில் இந்தியர்கள் போட்டியிட்டு பதவி ஏற்கும்போது இந்திய சுதந்திரத்தை எளிதாகப் பெற்று விடலாம் என காங்கிரஸின் சில தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால் காந்தியடிகள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காங்கிரசுக்குள் பெரும் பிளவு ஏற்பட்டது.

சி.ஆர். தாஸ் காங்கிரசுக்குள்ளேயே இருந்து கொண்டு 1928 இல் சுயாட்சி கட்சி என்ற பெயரில் தனி அமைப்பினை ஏற்படுத்தினார். மேலும் சுயராஜ்ய பத்திரிக்கை என்ற ஒன்றை ஆரம்பித்து நேதாஜியை அதற்கு ஆசிரியராக நியமித்தார். அந்த நேரத்தில் (1928) காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காந்தியின் சுயாட்சி கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் பேசவே பல தலைவர்கள் பயந்தனர். அந்த நிலையில் காந்தியின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தக் கூட்டத்தில் நேதாஜி கருத்து தெரிவித்தார். நேதாஜியின் கருத்துக்களுக்கு நேரு ஆதரவு கரம் நீட்டினார். காந்தியுடன் பல நேரங்களில் நேதாஜி நேரடியாகவே விவாதத்தில் ஈடுபட்டு முரண்பட்டார். அதனால் காங்கிரஸின் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப் பட்டார்.

காங்கிரசுக்குள் தங்களது தொடர்பினை முறித்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து இந்திய விடுதலை சங்கம் என்ற புதிய அமைப்பினை ஏற்படுத்தினார் நேதாஜி. பின்னர் இந்த இயக்கமானது காங்கிரசின் மிதவாதிகளின் கைக்குப் போனது என்பதும் குறிப்பிடத் தக்கது. பின்னர் ஸ்ரீநிவாச ஐயர் தலைமையில் ஜனநாயக கட்சியை தோற்றுவித்தார் நேதாஜி. இந்த கட்சியில் இருந்தும் நேதாஜி விலகினார்.

இந்திய அரசியல் கட்சிகளின் தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் திலக், கோகலே போன்றோர்களின் பங்கினைக் குறித்து பல நேரங்களில் மிகவும் வியந்து பார்க்கும் போக்கு காணப்படுகிறது. ஆனால் இந்திய வரலாற்றில் காங்கிரசின் முரண்பாடுகளுக்கு மத்தியில் பல அரசியல் கட்சியையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி விடுதலை உத்வேகத்திற்கு முதன்மை காரணமாக நேதாஜி இருக்கிறார் என்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.

சுயாட்சி, சுயராஜ்யம் உடன்பாடு

நேதாஜி 1924 ஆம் ஆண்டு கொல்கத்தா மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு  மேயராக பதவியேற்று மக்களுக்கு ஆதரவாகப் பல பணிகளை மேற்கொண்டார். அந்த சமயத்தில் ஆங்கில அரசினை கவிழ்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நாடு முழுவதும் நேதாஜிக்கு ஆதரவாகக் குரல்கள் ஒலித்தன. அந்தச் சமயத்தில் சுயராஜ்ய கட்சி சட்ட சபையில் இருந்து வெளியேறுவது என முடிவு செய்தது. காந்தியடிகள் சுயராஜ்யக் கொள்கைகளில் உடன்பாடு கொண்டிருந்ததால் காங்கிரசுக்குள் இருந்த பிளவினை சரி செய்தார். காங்கிரஸ் என்ற பெரிய அமைப்பிற்குள் சட்டசபை தேர்தலில் பங்கு கொள்வது என்ற முதன்மையான அரசியல் ஆரம்பத்தை ஏற்படுத்தியவர் நேதாஜியே ஆகும்.

நாடு முழுவதும் நேதாஜியின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டதால் பிரிட்டிஷ் அரசு அவரை மாண்டலே சிறைக்கு மாற்றியது. சிறை வாழ்க்கையில் நேதாஜி கடுமையாக நோய் வாய்ப்பட்டார். மருத்து சிகிச்சை அளிக்கவும் பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொள்ளவில்லை என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விசயமாகும். நேதாஜிக்கு இந்திய மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு ஆங்கில அரசையே ஆட்டம் காண வைத்தது எனலாம்.

சிறையில் இருந்த நேதாஜியை வெளியே கொண்டு வருவதற்கான வழி எதுவும் தென்பட வில்லை. எனவே 1926 இல் சட்ட மன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சிறைக்குள் இருந்து கொண்டு மக்கள் மத்தியில் தனது தேர்தல் அறிக்கையினை வெளியிடுவதற்கு நேதாஜி முயன்றார். ஆனால் அதற்கு ஆங்கில அரசு அனுமதி வழங்க வில்லை என்பதே மோசமான அரசியல் நிலைமையை சுட்டிக் காட்டுகிறது. பின்னர் தேர்தலில் வெற்றிப் பெற்ற நிலையில் நேதாஜியை ஆங்கில அரசு விடுவிக்க முடிவு செய்தது. ஆனால் கல்கத்தாவிற்கு செல்லக் கூடாது எனவும் நேரடியாக ஐரோப்பாவிற்கு சென்று விட வேண்டும் எனவும் அவருக்கு அறிவுறுத்தப் பட்டது.

நேதாஜி உயிருடன் இல்லை என்றும் அவர் சிறையில் இறந்து விட்டார் என்றும் அப்போது வதந்திகள் பரப்பப் பட்டன. ஆனால் நேதாஜி சிறையில் இருந்து நேரடியாக கொல்கத்தா திரும்பினார். பின்னர் 1930 வாக்கில் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சுற்றுப் பயணத்தில் முசோலினியை சந்தித்து இந்திய விடுதலை குறித்து அவரிடம் உதவிக் கேட்டார். பின்பு, 1938 இல் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மீண்டும் ஆங்கில அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டியதாகக் கூறி 1940 இல் கைது செய்யப்பட்டார்.

இரண்டாம் உலகப்போரின் போது நேதாஜி மிகவும் தீவிரமாக இந்திய விடுதலை போருக்கான வேலைப்பாடுகளில் ஈடுபட்டார். ஏனெனில் ஆங்கில அரசு இரண்டாம் உலகப் போரில் கடும் தோல்வியைச் சந்தித்தது. அந்நேரத்தில் ஆங்கில அரசிற்கு எதிராக உள்ள நாடுகளிடம் உதவி பெற்று இந்திய விடுதலையை எளிதாக அடைந்து விடலாம் என்று நினைத்தார் நேதாஜி. அதற்காக சிறையில் இருந்தபடியே உண்ணா விரதத்தை மேற்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணா விரதத்தைக் கைவிடுமாறு ஆங்கில அரசு அவரைக் கேட்டுக் கொண்டது.  நேதாஜி இணங்க மறுத்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழகத்துடனான தொடர்பு

இந்திய சுதந்திரத் தாகம் அன்றைக்கு வட மாநிலங்களை விட தென் பகுதிகளில் மிகவும் வீரியம் கொண்டிருந்தது எனலாம். அதனால் தான் தென்தமிழகத்தில் இருந்து பல தலைவர்கள் சுதந்திர போரில் பங்கு கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். காங்கிரசுடன் வேறுபாடு கொண்ட சமயத்தில் சென்னை மாகாணத்தை சேர்ந்த ஸ்ரீநிவாச ஐயர் தலைமையில், காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்ற அமைப்பினை ஏற்படுத்தினார் நேதாஜி. பின்பு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியால் அந்த அமைப்பினைக் கலைத்துவிட்டு இந்திய போர்வோர்ட்டு கட்சியினைத் தொடங்கினார். அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் இதில் பணியாற்றினர். பசும்பொன் முத்தராமலிங்க தேவரின் முயற்சியால் இந்திய தேசிய ராணுவப் படைக்குத் தமிழகத்தில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கு கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆசிய அளவில் முதல் முதலாக இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படையினை ஜான்சி ராணி படை என்ற பெயரில் ஏற்படுத்தினார் நேதாஜி. அந்த பெண்கள் படைக்கு தலைமை வகித்தவர் ஒரு தமிழகப் பெண் என்பதும் குறிப்பிடத் தக்கது. லட்சுமி  சாகல் என அறியப்படுகின்ற லட்சுமி அம்மையைர்  சிங்கப்பூரில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பெண்களை சேர்த்துக் கொண்டு பர்மாவின் எல்லையில் இருந்து இந்தியா நோக்கி பயணப்பட்டார்.

இந்தியாவை விட்டு வெளியேறுதல்

இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் செல்ல நினைத்தார் நேதாஜி. எனவே ஆங்கில அரசின் கண்காணிப்பில் இருந்து தப்பி, பாகிஸ்தானின் பெசாவர் வழியாக பின்னர் ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். பின்னர் இத்தாலியின் தூதர அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று இத்தாலி வழியாக ரஷயா செல்லத் திட்டம் தீட்டினார். ஆனால் ஹிட்லர் ஜெர்மனிக்கு வருமாறு தகவல் கொடுக்கவே நேதாஜி ஜெர்மனிக்கு பயணமானார். மார்ச் மாதத்தில் பெர்லின் வந்தடைந்ததாகவும் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப் பட்டதாகவும்  அந்நாட்டு பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இந்த செய்திகள் வெளியான பின்பு தான் நேதாஜி உயிருடன் இருக்கும் செய்தி இந்திய மக்களுக்குத் தெரிய வந்தது.

ஹிட்லரிடன் இந்திய விடுதலைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். முதலில் முழு ஆதரவு அளிப்பதாகவே ஹிட்லர் அறிவித்திருந்தார்.  சிறிது காலம் கழித்தே இந்த முயற்சி தோல்வியைத் தழுவியது என்பதை ஒத்துக் கொண்டார்.

ஜெய்ஹிந்த் / தேசிய கொடி / தேசிய பாடல்         

வெளிநாடுகளில் இருந்தவாறே இந்தியாவிற்கு என ஒரு வானொலி வசதியை ஏற்படுத்தி இந்திய மக்களிடம் சுதந்திரத் தாகத்தை ஊட்டினார். சுதந்திர இந்திய அமைப்பு என்ற கருத்தினை உருவாக்கி “ஜனகண மன’‘ பாடலை தேசிய பாடலாக அறிவித்தார். பின்னர் ஜெர்மனியில் இருந்து ஜப்பான் ராணுவ ஜெனரல் டோஜோவை சந்திக்க நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்து இந்திய விடுதலைக்கு உதவுமாறு கோரினார்.

இந்திய தேசிய ராணுவத்தை மீண்டும் உயிர்ப்பித்து இந்திய விடுதலைக்காகப் போராடும் இளைஞர்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். “ரத்தம் கொடுங்கள், நான் சுதந்திரம் தருகிறேன்” என்ற முழக்கத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். பின்பு 1943 இல் சிங்கப்பூரில் இருந்து சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். அதே ஆண்டு டிசம்பர் 29 இல் அரசியல் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து சுதந்திர இந்தியாவிற்கான தேசியக் கொடியை ஏற்றினார். நேதாஜியின் இத்தகைய முயற்சிகளுக்கு இத்தாலி, ஜெர்மனி, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஆதரவு கரம் நீட்டின.

பர்மா விலிருந்து தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் மழை காரணங்களினாலும் ஆங்கில போர்க் கருவிகளின் வலிமையினாலும் தேசிய படையினர் இந்தியா நோக்கி படை எடுத்து வருவதில் தொய்வு ஏற்பட்டது. இந்திய எல்லை பகுதிக்கு அருகே இந்திய தேசிய ராணுவப் படையினரை கொத்து கொத்தாக கொன்று குவித்தது ஆங்கில அரசு.

ஜப்பான் தோல்வி

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியைத் தழுவியதால்  நேதாஜியின் ராணுவப் படைக்கான உதவிகள் குறைந்துவிட்டன. பெண்கள் ராணுவப் படையின் மீது ஆங்கில அரசு வெடிகுண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான போர் வீராங்கனைகளை முழுவதுமாக அழித்தது என்பதும் மிகப் பெரிய தோல்விக்கு காரணமாக மாறியது.

இந்தியா விடுதலை

நேதாஜியின் ராணுவப் படைக்கான ஆட்சேர்ப்பு ஆங்கில அரசாங்கத்தை பயத்தில் ஆழ்த்தியது. ஆங்கில படையில் உள்ள இந்தியர்களையும் நேதாஜியின் சுதந்திர தாகம் சென்றடைந்து இருந்தது. எனவே ஆங்கில அரசாங்கம் அவர்களுடைய படையையே முழுமையாக நம்ப முடியாத நிலை உருவானது. ஆங்கில அரசு இந்தியாவிற்கு விடுதலையை அறிவித்ததில் நேதாஜி ஏற்படுத்தி இருந்த சுதந்திர தாகமும் முக்கிய காரணம் எனலாம்.

நேதாஜியின் மறைவும் மர்மமும்                              

நேதாஜியின் வாழ்க்கையினைப் போன்றே அவரின் இறப்பும் மிகவும் பிரமிப்பு உடையதாகவும் சுவராசியம் நிறைந்ததாகவும் அமைந்துவிட்டது எனலாம். நேதாஜி தனது 48 வது வயதில் 18, ஆகஸ்ட் 1945 இல் தாய்பெய்ன் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டதாக ரஷ்ய ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால் தாய்பெய்ன் விமான நிலையத்தில் அத்தகைய விபத்தக்கள் எதுவும் நடக்கவில்லை என அப்போது அறிக்கையும் வெளியிட்டு இருந்தது. ஆனால் நாடு முழுவதும் நேதாஜி இறந்து விட்டார் என்ற செய்திகள் பரவின. நேதாஜி இறந்து விட்ட செய்தியினை ஆங்கில அரசாங்கம் உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

நேதாஜியுடன் இணைந்து பணியாற்றி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 1949 இல் ஒரு மாநாட்டில் “நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. அவர் சரியான தருணத்தில் வருவார். என்னோடு நேரடியான தொடர்பில் இருக்கிறார்‘’ என்று பேசினார். இதனை அடுத்து விடுதலை பெற்ற இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு அவர்கள் நேதாஜியின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக கமிட்டி ஒன்றையும் அமைத்தார்.

இந்திய அரசு இறந்து விட்ட வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கொடுக்கப் படும் பாரத ரத்னா விருதினை அளிக்க முற்ப்ட்ட போது அதனை நேதாஜி குடும்பம் மட்டுமல்ல இந்தியாவில் பலரும் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. ஏனெனில் நேதாஜியை இறந்து விட்ட மனிதராக ஒருபோதும் பலர் நினைக்கவில்லை. அவர் இப்போதும் கல்கத்தாவில் தலை மறைவாக வாழ்ந்து வருகிறார் என்று கூட நம்பப் படுகிறது.

தனது வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் இந்திய சுதந்திரத்தை மட்டுமே நினைத்து கொண்டிருந்த ஒரு மாமனிதன் இந்திய வரலாற்றின் சுதந்திர தாகத்துக்கு மட்டுமல்லாது, வீரத்தின் அடையாளமாகவே எப்பொழுதும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார். ஜெய்ஹிந்த் என்ற வாசகத்தை இந்திய சுதந்திர உணர்வுக்காக அவர் உருவாக்கினார். அவர் பிறந்த நாளில் அவரின் வீரத்திற்கு இன்று நாம் பரிசளிப்போம். ஜெய்ஹிந்த்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.