close
Choose your channels

பாஜக- எரி எண்ணெய்கள் விலையை அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கிறது....!  சீமான் காட்டம்...!

Monday, July 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பிழையான நிர்வாக முடிவுதான், நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளியுள்ளது. எரி எண்ணெய்கள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி நாட்டு மக்களை பாஜக அரசு வாட்டி வதைக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

"வரலாறு காணாத வகையில் வாகன எரி எண்ணெய்களின் விலையைப் பன்மடங்காக உயர்த்திப் புதிய உச்சத்தைத் தொட வழிவகைசெய்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயரச் செய்ததோடு மட்டுமல்லாது, எரிகாற்று உருளையின் விலையையும் ஒவ்வொரு மாதமும் உயர்த்தி ஏழை, எளிய, அடித்தட்டு மக்களை வாட்டி வதைத்து வரும் மத்திய அரசின் தொடர் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் வேலைவாய்ப்பின்மையாலும், வருவாய் இழப்பினாலும் மக்கள் பரிதவித்து வரும் வேளையில் அதுகுறித்துத் துளியும் சிந்தித்திடாது எரிபொருட்களின் விலையை அதிகப்படியான வரிவிகிதத்தால் உயர்த்துவது மனசாட்சியற்ற மாபாதகர்களால் நிகழ்ந்தேறும் மாபெரும் கொடுமையாகும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக்கொள்கைகளினாலும், பிழையான நிர்வாக முடிவுகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளி, பணவீக்கம், தொழில் முடக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதன் விளைவாக விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தற்போது எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையையும் உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைத்து மேலும் வறுமையின் பிடிக்குள் தள்ளுவது ஏற்கவே முடியாத கொடுஞ்செயலாகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யாது அவர்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி வரும் கொடுங்கோன்மை ஆட்சிமுறையும், நிர்வாகச் செயல்பாடுகளும் வெட்கக்கேடானது.

கொரோனா ஊரடங்கினால் தொழில்கள் யாவும் முடங்கியதால் வேலையின்மை அதிகரித்து, அடித்தட்டு நடுத்தர வர்க்கம் வருவாய் ஈட்ட வழியேதுமில்லாது அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில் எரி எண்ணெய்கள் விலையேற்றத்தினால் ஏற்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு நாட்டு மக்களை மிக மோசமான இன்னல்களுக்கு உள்ளாக்கும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்க எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடாத பாஜக அரசு, மக்கள் தலைமீது வரிச் சுமையை மட்டும் ஏற்றி வைப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று விலையைக் கண்மூடித்தனமாக அதிகரிப்பதென்பது மக்கள் நலனுக்குப் புறம்பான அரசப்பயங்கரவாதம்; அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பொருளாதாரத் தாக்குதலாகும்.

ஏற்கனவே, சுங்கக்கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மட்டுமின்றி, சரக்கு வாகன உரிமையாளர்களையும் இது வெகுவாகப் பாதிக்கும். சுமையை ஏற்றிச்செல்லும் பொருள்களின் வாடகைச்செலவு உயர்ந்து விற்பனைச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரவே இது வழிவகுக்கும். இதனால், நடுத்தர, ஏழை மக்கள் பெருஞ்சிரமத்திற்கு ஆளாவார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் 650 ரூபாய் என்கிற அளவில் இருந்த எரிகாற்று உருளை ஒன்றின் விலையானது தற்போது 850 ரூபாய் எனக் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துளது. இம்மாதம் மட்டும் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளை 25 ரூபாயும், வர்த்தகப் பயன்பாட்டு எரிகாற்று உருளையின் விலை 84 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, வாகன எரி எண்ணெய்கள்களின் விலையும் 100 ரூபாய் என அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளைகளைப் பயன்படுத்த முடியாத கொடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்றவாறு எரி எண்ணெய்கள் விலையின் ஏற்ற, இறக்கங்களை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று பெட்ரோல் விலை நிர்ணய உரிமையைக் காங்கிரசு அரசும், டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குக் கையளித்தன. ஆனால், கச்சா எண்ணெய் விலையின் உயரும்போது மக்களின் தலையில் கட்டும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும்போது நியாயமாக மக்களுக்குச் சேரவேண்டிய விலைக்குறைப்பை செய்யாமல், அந்த இலாபத்தைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது அப்பட்டமானப் பகற்கொள்ளையாகும். இவற்றைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு, எண்ணெய் நிறுவனங்களின் வரம்பற்றக்கொள்ளையைக் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பதோடு, பதவியேற்ற நாளிலிருந்து பலமடங்கு கலால் வரியையும் உயர்த்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடந்த பத்து ஆண்டுகளில் பலமுறை கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தியது தற்போது எரி எண்ணெய்களின் உண்மையான விலையைவிட அதன்மீதான வரி அதிகமாக இருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. எரிகாற்று உருளையைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மண்ணெண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படமாட்டாது என அறிவித்த அரசு, தற்போது எரிகாற்று உருளையும் வாங்க முடியாமல், அத்தியாவசியப்பொருட்களும் கிடைக்கப்பெறாமல் எளிய மக்கள் திண்டாடும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது.‌

ஆகவே, இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எரி எண்ணெய்கள் விலைநிர்ணய அதிகாரத்தைத் மீளப்பெறுவதோடு, எரி எண்ணெய்கள்களின் மீதான வரியையும் உடனடியாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் எரி எண்ணெய்கள்களின் விலை குறைக்கப்படும்; எரிகாற்று உருளைக்கு மானியம் வழங்கப்படும் என அளித்த உறுதிமொழியை, விலை உயர்வால் மக்கள் பெரும் இக்கட்டிற்கு ஆளாகியுள்ள தற்போதைய துயரகாலத்தைக் கருத்தில்கொண்டு உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கோருகிறேன்" என கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos