அமெரிக்காவில் வலுக்கும் கறுப்பினத்தவர் போராட்டம்!!! பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிபர் ட்ரம்ப்!!!

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

 

மே 25 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் போராட்டம் வலுத்து வருகிறது. காரணம் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியா காவல் பகுதியில் 46 வயதான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட போது உயிரிழந்தார். இந்த மரணத்திற்கு நீதிக்கேட்டு பல மாகாணங்களில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.  ட்ரம்ப் அரசாங்கம் இந்தப் போராட்டத்தை உள்நாட்டு பயங்கரவாதம் என முத்திரைக் குத்தியதாகவும் இதனால் கோபமடைந்த போராட்டக் குழுக்கள் வெள்ளை மாளிகை நோக்கி சென்றதாகவும் டெய்லி பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் ஒரு மளிகைக் கடையில் கள்ளப் பணத்தை செலுத்தியதால் அவரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். ஆனால் அவர் காரை விட்டு இறங்க மறுத்தார் எனவும் அந்த விவகாரத்தில் சிறு சண்டை நிகழ்ந்ததாகவும் பத்திரிக்கைகள் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளியான ஒரு வீடியோவில் உயிரிழந்த நபரின் தலை காரின் சக்கரத்தில் இருக்கிறது. சக்கரத்தில் மாட்டிக்கொண்ட அவரைக் காவல் அதிகாரி ஒருவர் தனது பூட்ஸ் காலை வைத்து அழுத்துகிறார். அப்போது வலிக்கிறது விட்டு விடுங்கள் என கத்தியது முதற்கொண்டு அனைத்தும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைத் தளங்களில் வெளியாகி கடும் கண்டத்திற்கு ஆளானது.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் போலீஸ் காவலில் வைத்து இறப்பது இது முதல் முறை அல்லவென்றும் தொடரும் அவமதிப்புக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் ஆக்ரோஷமாக பல இடங்களில் கோஷமிட்டு வந்தனர். இந்நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் பயங்கரவாதிகள் என்ற வாசகத்தை அரசாங்க அதிகாரிகள் வெளியிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை நோக்கி நூற்றுக் கணக்கில் படையெடுத்தனர். வெள்ளை மாளிகை அருகில் இருக்கும் ஒரு சிறு பூங்காவில் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பும்போது அவர்களை நோக்கி போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகிறது.

சிறிது நேரத்திலேயே வெள்ளை மாளிகையில் கலவரம் ஆரம்பித்ததாகவும் அந்தக் கலவரத்தை வெள்ளை மாளிகை அதிகாரிகள் எதிர்ப்பார்க்க வில்லை என்றும் டெய்லி பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. அந்நேரத்தில் அதிபர் ட்ரம்பை பாதுகாக்க அவரை பதுங்கு குழியில் தங்க வைத்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. சுமார் ஒரு மணிநேரம் அதிபர் ட்ரப்ம் பதுங்கு குழியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 15 மாகாணங்களில் கடுமையான போலீஸ் காவல் அமலுக்கு வந்திருக்கிறது. ஆங்காங்கே சிறு சிறு போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

ஒருபுறம் கொரோனா அமெரிக்காவையே புரட்டிப் போட்டிருக்கும் நேரத்தில் கறுப்பினத்தர்வர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பல மாகாணங்களில் இரவு நேரங்களில் ஊரடங்கு நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வேறு நடைபெற இருக்கிறது. இத்தருணத்தில் கறுப்பினத்தவர் அவமதிப்பு என்ற செய்தியால் அதிபர் ட்ரம்ப்பின் மதிப்பு குறைந்து விடும் என்ற அச்சத்தையும் சில பத்திரிக்கைகள் பேச ஆரம்பித்து இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்கனவே சீனாவைக் குற்றம் சாட்டி வரும் ட்ரம்ப் தற்போது இந்நிலைமையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.