விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை!

கடந்த சில மாதங்களாகவே அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜீத், தளபதி விஜய் என பல பிரபலங்களின் வீடுகளுக்கு சமீபத்தில் மிரட்டல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பதும் இந்த மிரட்டல் அனைத்துமே புரளி என்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சற்றுமுன்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பேசி உள்ளார்

இதனையடுத்து போலீசார் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை செய்ததில் அது புரளி என்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.