மணமகனுக்கு கொரோனா: கடைசி நேரத்தில் திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இந்த நிலையில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களும் தற்போது நடக்க தொடங்கிவிட்டன.

அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண்ணுக்கும் டெல்லியில் பணிபுரிந்த ஓர் இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இதற்காக மே 29ஆம் தேதி டெல்லியில் இருந்து மணமகன் தனது குடும்பத்தினருடன் டிராவல்ஸில் கோவைக்கு புறப்பட்டார்

கோவைக்கு வந்த மணமகன் குடும்பத்தார் மணமகளின் உறவினர் வீட்டில் தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மணமகன் குடும்பத்தார் வந்த டிராவல்ஸில் பயணம் செய்த தேனியை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த டிராவல்ஸில் பயணம் செய்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்த சுகாதாரத்துறை மணமகன் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர்

இந்த நிலையில் மணமகன் குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின்படி கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது. தாலி கட்டுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் திருமணம் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வாழைத் தோரணங்கள் கட்டி திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் திடீரென திருமணம் நின்றதால் மணமகள் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் மணமகன் கொரோனாவில் இருந்து குணமாகியவுடன் இந்த திருமணம் நடக்கும் என இரு வீட்டார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது