ஆண், டாக்டர் எதுவுமே வேண்டாம்… ஆன்லைன் உதவியால் இ-பேபியைப் பெற்ற பெண்மணி!

  • IndiaGlitz, [Wednesday,September 22 2021]

 

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆண் துணை வேண்டும். அதுவும் இல்லையென்றால் செயற்கையாக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள மருத்துவரின் உதவியாவது வேண்டும். ஆனால் இங்கிலாந்தில் ஒரு பெண்மணி ஆன்லைனில் விந்தணுவை ஆர்டர் செய்த பிறகு, தனது சொந்த முயற்சியிலேயே அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார்.

இங்கிலாந்தில் உள்ள நுந்தோர்ப் நகரில் வசித்துவரும் 33 வயதான பெண்மணி ஸ்டெஃபெனி டெய்லர். இவருக்கு ஏற்கனவே இருந்த உறவின் மூலமாக பிரான்கி என்ற 5 வயது சிறுவன் இருக்கிறான். இந்நிலையில் தனது குழந்தை சகோதர- சகோதரி துணையில்லாமல் தனிமையில் வளர்ந்து வருவதை ஸ்டெஃபெனி விரும்பவில்லை. இதற்காக செயற்கையாகக் கருத்தரித்து ஒரு குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறார்.

இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற ஸ்டெஃபெனியிடம் மருத்துவர்கள் ஒரு செயற்கை கருத்தரிப்புக்கு இந்திய மதிப்பில் ரூ.1.60 ஆயிரம் செலவாகும் எனத் தெரிவித்து உள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டெஃபெனி வேறுவழியைத் தேட ஆரம்பித்தார். இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக விந்தணுவை விற்கும் செயலியை அவர் கண்டுபிடித்தார். அந்த செயலியில் நல்ல உடல் தகுதியுடன் ஒரு நன்கொடையாளரைத் தேர்ந்தெடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விந்தணுவையும் கடன் வாங்கியிருக்கிறார்.

செயலியில் விண்ணபித்த 3 வாரங்களுக்குப் பிறகு ஸ்டெஃபெனியின் வீட்டிற்கே அந்த கொடையாளர் நேரில் வந்து விந்தணுவை தானம் கொடுத்தாராம். அதையடுத்து சுய-கருவூட்டலுக்கான கிட்டையும் ஆன்லைனிலேயே அவர் ஆர்டர் செய்திருக்கிறார். பின்னர் செயற்கை கருவூட்டலைப் பற்றிய தகவல்களை Youtube வாயிலாகத் தெரிந்துகொண்டு அதன்படி செய்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

மேலும் தனக்கு விந்தணுவை தானம் கொடுத்த நபரை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசிய ஸ்டெஃபெனி தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அதற்கு “ஈடன்” எனப் பெயர் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அந்த நபர் எதிர்காலத்தில் டோனரை பார்க்க விரும்பினால் சிக்கல் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள் எனத் தெரிவித்து இருப்பது மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்டெஃபெனி ஆன்லைனில் விந்தணு மற்றும் செயற்கை கருவூட்டலுக்கான கருவியை ஆர்டர் செய்து, Youtube மூலம் செய்முறையைத் தெரிந்து கொண்டு குழந்தைப் பெற்றுக்கொண்ட சம்பவம் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் உலகிலேயே முதல் இ-பேபியைப் பெற்றெடுத்த பெண்மணி என்றும் ஸ்டெஃபெனி கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் இதுபோன்ற முயற்சி உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.