ஏற்றுமதி செய்யப்பட்ட “எருமை“ இறைச்சியில் கொரோனா தாக்கம்? தொடரும் சிக்கல்!

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

இந்தியாவில் இருந்து கம்போடியாவிற்கு 5 கப்பல் கண்டெய்னர்களில் “நீர் எருமை” இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இறைச்சியில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் தங்கி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் பெய்ஜிங் மாகாணத்தில் உள்ள பல்வேறு நகரங்களில், பொதுமக்கள் வாரக்கணக்காக கோழி இறைச்சியை தவிர்த்து வந்தனர். அடுத்து இறக்குமதி செய்யப்பட்ட மீன் இறைச்சியிலும் கொரோனா வைரஸ் இருப்பதை சீன அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சாலமன் மீனுக்கு அந்நாடு சில மாதம் வரை தடை செய்திருந்தது.

அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நீர் எருமை இறைச்சியில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை அந்நாட்டு சுகாதாரத்துறை கண்டுபிடித்து உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் உள்ள அந்த இறைச்சியை அதிகாரிகள் அழித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

மனிதர்களிடம் அதிகளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இதுவரை ஒரு விலங்குகளைத் தாக்கி இருக்கிறது. ஆனால் கொல்லப்பட்ட இறைச்சியிலும் இந்தக் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தற்போது விஞ்ஞானிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.