இந்த காலத்திலும் ஆண் திமிர், ஈகோவை பார்க்க கவலையாக உள்ளது. 'கேப்டன் மில்லர்' நடிகை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


செய்தி வாசிப்பாளர், சினிமா நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் மற்றும் ’கேப்டன் மில்லர்’ உட்பட சில படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ரகுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இந்த காலத்தில் கூட ஆண் என்ற திமிர் மற்றும் ஈகோவை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நிருபர் ஒருவர் சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியதை அடுத்து அவர் இந்த பதிவை செய்துள்ள நிலையில் அந்த பதிவில் அவர் கூறியது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
இன்றும் பல ஆண்கள் ஆண் திமிர் மற்றும் பெண் விரோத மனப்பாங்குடன் நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது. அதைவிட வருத்தமளிப்பது, இந்த மாதிரியான நடத்தை ஒரு செய்தியாளரிடம் இருந்து வருவது.
கடந்த பல வருடங்களாக தேவையற்ற கவனத்தை சில புத்தியில்லாத மக்களிடமிருந்து எதிர்கொண்டிருக்கிறேன். அந்த நேரங்களில், கோபமாக பதிலளிப்பதா? அல்லது மேடையின் மரியாதையை காக்க அமைதியாக இருக்க வேண்டுமா? என்ற இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நாள், நான் அமைதியாக இருக்க முடிவு செய்தேன். ஆனால் பிறகு எனக்கு மனம் மிகுந்த சுமையாக இருந்தது. சிறிது அழுதேன், என்னை நானே தேற்றிக் கொண்டு மீண்டும் என் பணியை தொடர்ந்தேன்.
நியாயமாகச் சொன்னால், நான் ஒருநாள் பிரபலமாக இருக்க வேண்டும் என்று கனவு காணவில்லை. 2018-ஆம் ஆண்டு, ஒரு செய்தி வாசிப்பவரானேன். எந்த சினிமா அல்லது மீடியா பின்னணியும் இல்லாமல் இந்தத் துறையில் நுழைந்தேன். ஆனாலும் என் பயணம், அனுபவங்கள் மற்றும் கடின உழைப்பு தான் இன்று என்னை உருவாக்கியிருக்கின்றன.
சினிமாவில் பலவகையான வேடங்களில் நடித்திருக்கிறேன். இளம் ஊடகப் பெண்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வு எனக்குள் இருக்கிறது. ஒருவர் வாழும் விதம் தான் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும், தோற்றம் அல்ல என்று நம்புகிறேன். மக்கள் நேர்மறையாக, கடினமாக உழைத்து, நல்லவர்களாக இருக்க நான் உதவ விரும்புகிறேன். அந்த முயற்சியில் ஒரு சிறிய பங்கு இருந்தாலும் அது எனக்கு பெரும் மகிழ்ச்சி.
ஒரு கலைஞராக வளர்ந்து, இயக்குநர்களிடம் இருந்து மற்றும் குழுவினரிடம் இருந்து பாராட்டு பெறுவது எனக்கு மிக முக்கியமானது. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து தங்கள் வழிகாட்டுதலையும் நம்பிக்கையையும் வழங்கும்போது, அது என் பயணத்தை தொடர வழி காட்டுகிறது. ஆனாலும் ஒரு வளர்ந்து வரும் கலைஞராக, நிதி குறைபாடுகள் எனக்கு உள்ளது. அதனால் தான் உண்மையாக நேசிக்கும் வேலைதான் நான் தேர்ந்தெடுக்கிறேன், அது என் பயணத்தை தொடர உதவுகிறது. சில நேரங்களில் என் பொறுமையை சோதிக்கும் நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனாலும், ஒவ்வொரு அனுபவமும் என்னை வலிமையான, புத்திசாலியான நபராக உருவாக்குகிறது.
மக்கள் என்னை "அவங்க வீட்டு பொண்ணு" என்று சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அது என்னை பெறக்கூடிய மிகப்பெரிய பாராட்டாக இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள், உங்களை எல்லாம் நிச்சயமாக பெருமைப்படுத்துவேன்
உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றி!
இவ்வாறு நடிகை ஐஸ்வர்யா ரகுபதி தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments