கொரோனா நேரத்தில் செல்போன் பத்திரம்: பயமுறுத்தும் தொழில்நுட்பத் தகவல்கள்!!!

  • IndiaGlitz, [Friday,June 26 2020]

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியத் தாக்கத்தால் பல பொருட்களின் இறக்குமதி குறைந்து இருக்கிறது. அதிலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தொழில்நுட்பப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டை கவனத்தில் கொண்டு செய்யப்பட்ட இந்நடவடிக்கையால் தற்போது செல்போன் உதிரி பாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அன்று முதல் மக்களின் ஒரே பொழுது போக்கு அம்சமாக செல்போன்கள்தான் இருந்து வருகின்றன. இதனால் செல்போன்களின் பல உதிரி பாகங்கள் பழுதடைந்து வருகின்றன. இந்த பாகங்களை சரிசெய்வதற்கு கடைக்குப் போனால் பொருட்களின் இருப்புகள் இல்லாமல் போகிறது. ஒருசில கடைகளில் கிடைத்தாலும் அதன் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் புள்ளி விவரத்தின்படி 85 விழுக்காட்டு மக்கள் இந்தியாவில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துகின்றனர். சாதாரண போன்களைப் பயன்படுத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் கொரோனா நேரத்தில் செல்போன்களின் பயன்பாடு அதிகமாகி இருக்கிறது. இதனால் பல உதிரி பாகங்கள் பழுதடைந்து விடுகிறது. இதைச் சரிப்படுத்துவதற்கு அதிக விலைக் கொடுக்க வேண்டியிருக்கிறது என வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தத் தொடங்கிவிட்டனர். மேலும் மொத்த சரக்கு வைத்திருக்கும் சில வியாபாரிகளிடம் மட்டுமே உதிரிபாகங்கள் இருக்கின்றன. அதுவும் விற்று தீர்ந்துவிட்டால் நிலைமை என்னவாகும் என்றே தெரியாத நிலை உருவாகி இருக்கிறது.

தமிழகத்தில் தற்போது உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து விட்டதாக சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் கோவையில் 90 விழுக்காடு உதிரிபாகங்கள் கிடைப்பதே இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் பெரும்பாலான மொத்த வியாபாரிகள் வட மாநிலங்களைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். கொரோனா அச்சத்தால் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கலாம். இதனால் மேலும் நிலைமை சிக்கலாகியிருக்கிறது. சீனாவில் இருந்து 90 விழுக்காட்டு உதிரிப்பாகப் பொருட்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப் படுகின்றன. மற்ற 10 விழுக்காட்டுப் பொருட்கள் பின்லாந்து, கொரியா, கம்போடியா போன்ற நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப் படுகின்றன. ஆனாலும் சீனாவின் உற்பத்திக்கு குறைந்த விலைக் கொடுத்தால் போதும் என்பதால் சீனப்பொருட்களுக்கு கிராக்கி அதிகம்.

தற்போது சீனாவில் கொரோனா தாக்கத்தால் பல மாதங்களாக பொருட்களின் உற்பத்தி தடைப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உற்பத்தி ஆகியிருக்கும் பொருட்களையும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம். இதனால் உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. செல்போன்களைத் தவிர கம்பியூட்டர், லேப்டாப், சார்ஜர் போன்ற பல தொழில்நுட்பச் சாதனங்களுக்கும் நிலைமை இதுதான்.