பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது? மத்திய அரசின் முக்கிய பரிந்துரை
- IndiaGlitz, [Wednesday,April 08 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதன் பின்னராவது இயல்பு வாழ்க்கை தொடங்குமா? என்ற ஏக்கத்தில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஒரிசா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசுக்கு ஆலோசனை கூறி வருவதாகவும் இதனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படவில்லை என்றாலும் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்வி நிலையங்களை மே 15ஆம் தேதி வரை திறக்க வேண்டாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் ஒரு மாதம் விடுமுறை அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே வழக்கம்போல் ஜூன் மாதத்தில்தான் பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் வழிபாட்டுத்தலங்கள் மால்கள் திறப்பதற்கும் கட்டுப்பாட்டை ஒரு மாதம் நீடிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.