Download App

Chekka Chivantha Vaanam Review

செக்க சிவந்த வானம்: திரைவிமர்சனம் - சகோதரர்களின் யுத்தம்

இயக்குனர் மணிரத்னம் படம் என்றாலே நிச்சயம் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் இன்று வெளியாகியுள்ள செக்க சிவந்த வானம்' படத்தில் மணிரத்னத்துடன் மல்டி ஸ்டார்களும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு இமயம் அளவுக்கு இருந்தது. ஒரு பிரபல இயக்குனருக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலில்  இயக்குனர் ஜெயித்தாரா? என்பதை இப்போது பார்ப்போம்

சென்னை சிட்டியின் மிகப்பெரிய கேங்ஸ்டர் தலைவர் பிரகாஷ்ராஜ், சிறுவயதில் இருந்தே குற்றங்கள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அரசியல் செல்வாக்கு பெற்று அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர். இவருக்கு அரவிந்தசாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். திருமண நாளில் மனைவி ஜெயசுதாவுடன் பிரகாஷ்ராஜ் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அவரை கொலை செய்ய முயற்சி நடக்கின்றது. இந்த முயற்சியில் பலத்த காயத்துடன் தப்பிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தந்தையை கொலை செய்ய தொழில் எதிரி தியாகராஜன் தான் முயற்சித்திருப்பார் என்று முடிவு செய்த மூன்று மகன்களும் அவரை எதிர்க்க தயாராகின்றனர். ஆனால் பிரகாஷ்ராஜ், தன்னை கொல்ல தியாகராஜன் முயற்சிக்கவில்லை, தன்னுடைய மூன்று மகன்களில் ஒருவர்தான் இதற்கு காரணம் என ஜெயசுதாவிடம் கூறுகிறார். உண்மையில் இந்த சம்பவத்திற்கு காரணம் யார்? தியாகராஜனா? மூவரில் ஒருவரா? இதனால் ஏற்படும் பிரச்சனைகள், இருதரப்பிலும் ஏற்படும் இழப்புகள், கடைசியில் துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால்தான் சாவான் என்ற விதிமுறை நடந்ததா? அல்லது மீறப்பட்டதா? என்பதற்கான விடைகளே இந்த படத்தின் மீதிக்கதை.

இதுவொரு மல்டி ஸ்டார் படம் என்றாலும் படத்தின் பாதிக்கு மேல் ஸ்கோர் செய்பவர் விஜய்சேதுபதிதான். மணிரத்னத்தின் வழக்கமான டயலாக் பேசும் பாணியில் சிக்காமல் தனது பாணியில் அவர் பேசும் நக்கலுடன் கூடிய ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் கைதட்டல் கிடைக்கின்றது. போலீஸ் இன்ஸ்பெக்டரான விஜய்சேதுபதி மேலதிரிகளால் சஸ்பெண்ட் ஆகி, அதன்பின் உயிர் நண்பர் அரவிந்தசாமியுடன் இணைந்து செய்யும் சேட்டைகள், சிம்பு, அருண்விஜய் ஆகிய இருவரையும் சமாளிக்கும் விதம், சஸ்பெண்ட் ஆனாலும் தான் போலீஸ் தான் என்று காட்டும் கெத்து என விஜய்சேதுபதியின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

விஜய்சேதுபதியை அடுத்து மனதில் நிற்பவர் சிம்பு. அவருடைய பழைய அலட்டல்கள் இந்த படத்தில் சுத்தமாக இல்லை. அமைதியாக அதே நேரத்தில் அழுத்தமாக அவர் தனது கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார். அண்ணன் அரவிந்தசாமிக்கு எதிரான போர் ஆரம்பித்ததும் சிம்புவின் அதிரடிகள் அட்டகாசம். 

'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு அருண்விஜய்க்கு கிடைத்த அருமையான கேரக்டர். பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க அவர் செய்யும் தந்திரம், தவறுகள் அவரையே சுற்றி வலைபின்னப்படுவதை அறிந்து அதிர்வது என அருமையான நடிப்பு.

அரவிந்தசாமிக்கு இது மற்றொரு படம். ஒருசில காட்சிகளில் ஓவர் ஆக்சன் தெரிகிறது. காதலி அதிதிராவ் மற்றும் மனைவி ஜோதிகாவிடம் இருக்கும்போது கூட டென்ஷனாகவே இருக்கின்றார். 

ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்தி மற்றும் டயானா எரப்பா என நான்கு ஹீரோயின்கள். நால்வருக்கும் இயக்குனர் மணிரத்னம் சமமாக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொருவரிடம் இருந்தும் சிறப்பான நடிப்பை பெற்றுள்ளார். இந்த மேஜிக்கை மணிரத்னம் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இருப்பினும் இந்த நால்வரில் நடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்சம் முந்துகிறார். துபாய் போலீசிடம் சிக்கிய பின்னர் அருண்விஜய்யை பார்த்து, 'நீ இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கின்றேன், நான் இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்கின்றாய்' என்ற வசனம் பேசும்போது ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு சூப்பர். அதேபோல் ஜெயசுதாவுக்கும் இயக்குனர் மணிரத்னம் தனது திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். சிம்புவிடம் இவர் சமாதானம் பேசும் காட்சி இன்னும் கண்ணுக்குள் உள்ளது.


 

கேங்க்ஸ்டர் வேடம் என்பது பிரகாஷ்ராஜூக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. இந்த கேரக்டரை அவர் எத்தனை முறை செய்தாலும் அத்தனை முறையிலும் வித்தியாசத்தை காண்பிக்க தவறுவதில்லை. அதேபோல் ஒருசில காட்சிகளில் மட்டும் வரும் தியாகராஜனும் ஓகே.

மணிரத்னம் படம் என்றாலே ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு ஒரு சந்தோஷம் வந்துவிடும் போல. மனிதர் ஒளிப்பதிவில் புகுந்து விளையாடியுள்ளார். செர்பியாவில் போலீசிடம் இருந்து சிம்பு தப்பிப்பதில் இருந்து கிளைமாக்ஸில் கார் சுற்றுவது வரை ஒளிப்பதிவில் மாயாஜாலம் செய்துள்ளார்.

ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம். திடீரென திடீரென விழும் கொலைகள், டுவிஸ்ட்களை சரியான இடத்தில் கோர்த்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் மணிரத்னம் அவர்களுக்கு இருக்கும் கெமிஸ்ட்ரி உலகமே அறிந்தது. பின்னணி இசையில் அப்படி ஒரு ஆர்வம் காட்டியுள்ளார் ரஹ்மான். பாடல்கள் தனியாக வராமல் ஆங்காங்கே காட்சிகளுடன் வருவதால் ரசிக்க முடிகிறது.

கேங்க்ஸ்டார் படம் என்பது மணிரத்னம் அவர்களுக்கு முதல் படத்தில் இருந்தே பழக்கப்பட்ட கதைதான். இருப்பினும் முதல் பாதியில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்விருந்தாலும் இரண்டாம் பாகத்தை ஜெட் வேகத்தில் கொண்டு சென்றதோடு, முதல் பாதியின் காட்சிகளை சரியாக இணைத்துள்ளது அவரது புத்திசாலித்தனமான திரைக்கதையை காட்டுகிறது. இருப்பினும் விஜய்சேதுபதியை தவிர மற்ற அனைவரையும் தனது வழக்கமான பாணியில் வசனம் பேச வைத்தது மட்டும் கொஞ்சம் திகட்டுகிறது. வசனம் பேசும் பாணி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இயல்பாக இல்லாமல் நாயகிகள் உள்பட எல்லோரும் ஒரே மாதிரி டயலாக் பேசுவதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸில் அரவிந்தசாமி, அருண்விஜய், சிம்பு ஆகிய முவரும் மாறி மாறி வசனம் பேசுவதில் இருந்து அவர்களுடைய கேரக்டர்களை பார்வையாளர்களுக்கு புரிய வைப்பதோடு, தான் போட்ட முடிச்சுகளையும் தெளிவாக புரிய வைக்கின்றார். அதே கிளைமாக்ஸில் சிம்புவிடம் விஜய்சேதுபதி பேசும் வசனங்கள் தான் இந்த படத்தின் ஹைலைட்.

மொத்தத்தில் ஆக்சன் பிரியர்களை கவரும் ஒரு விறுவிறுப்பாக கேங்க்ஸ்டர் த்ரில்லர்.

Rating : 3.5 / 5.0