ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் சென்னை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ரம்மி, கிரிக்கெட் உள்பட பலர் சூதாட்ட விளையாட்டுகள் ஆன்லைனில் கொட்டிக் கிடப்பதால், அதில் பணம் சம்பாதிக்கலாம் என்று இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்த விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

முதலில் பணம் கிடைப்பது போல் இருந்தாலும் அதன் பின்னர் படிப்படியாக பணத்தை இழந்து வருவது தான் இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் அனுபவமாக உள்ளது. இந்த விளையாட்டில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் பணத்தை தொலைத்த பலரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றமே கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை அமைந்தகரை என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் என்பவர் தான் வேலை பார்த்த கடையில் இருந்து 20,000 ரூபாய் பணத்தை திருடி அந்த பணத்தில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாகவும், அந்த பணத்தை விளையாட்டில் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து தற்கொலை செய்து கொண்ட நிதிஷ்குமார் கடிதம் எழுதியும் வைத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னராவது உடனடியாக ரம்மி உட்பட அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.