முகாமி தங்கியிருக்கும் சிறுமியின் பிறந்த நாளை கொண்டாட உதவிய சென்னை மாநகராட்சி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வேலை நிமித்தமாக வந்த பலர் வீடு திரும்ப முடியாமல் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கலில் உள்ளனர். இவர்கள் சென்னை மாநகராட்சி செய்த ஏற்பாட்டின்படி ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாநகராட்சி நிர்வாகம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு முகாமில் தங்கியிருந்த சிறுமி ஒருவருக்கு இன்று பிறந்தநாள் வந்ததை அடுத்து சென்னை மாநகராட்சியே அந்த சிறுமியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. சிறுமியின் பெயரில் கேக் வெட்டி அங்கிருந்த அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து அந்த சிறுமியின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த சிக்கலான நேரத்தில் சிறுமி தன்னுடைய பிறந்த நாளின் போது உறவினர்களுடன் இருக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தாலும், அந்த மனக்கவலை தீர்ப்பதற்காக முகாமில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் அந்த சிறுமி உள்பட அந்த முகாமில் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும் என்றும் சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.