திநகர் ரெங்கநாதன் தெரு 150 கடைகளை மூட உத்தரவு: சென்னை மாநகராட்சி அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காம்ப்ளக்ஸ் கடைகள் தவிர தனிக் கடைகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் கடைக்காரர்கள் கிருமி நாசினி, சமூக இடைவெளி, மாஸ்க், அடிக்கடி கைகழுவுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டுமென வழிகாட்டுதல்களை அரசு அறிவித்திருந்தது.

அந்த வகையில் சென்னையில் தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் உள்பட பல கடைகள் திறந்து வைக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு அறிவித்த வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறாதா? என்பதை அறிய குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள கடைகளில் கிருமிநாசினி சமூக இடைவெளியை முறையாக பயன்படுத்தவில்லை என தெரிய வந்தது.

இதனையடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் அரசின் வழிமுறைகளை பின்பற்றாத அனைத்து கடைகளும் மூடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.