ஹேப்பி பர்த்டே சென்னை: இன்று சென்னையின் 378வது பிறந்த நாள்
- IndiaGlitz, [Tuesday,August 22 2017]
இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும், தமிழகத்தின் தலைநகருமான சென்னைக்கு இன்று 378 வயது ஆகிறது. சென்னை மக்கள் இன்று உற்சாகத்துடன் சென்னையில் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சென்னைக்கு ஒரு ஹேப்பி பர்த்டே IndiaGlitz சார்பில் கூறிக்கொள்கிறோம்
உலகின் 35வது பெரிய நகரமான சென்னை, 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உருவானதாக கூறப்படுகிறது. சென்னப்ப நாயக்கர். என்பவரிடம் இருந்து கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்ட இடம் வாங்கினர். எனவே அவரது நினைவாக இந்த நகரும் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவுக்கு பின்னர் மதறாஸ் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படும் சென்னைக்கு பெருமை சேர்ப்பதே மெரினா கடற்கரைதான். உலகின் மிக நீள கடற்கரையில் ஒன்று மெரீனா கடற்கரை. சென்னை மக்களின் செலவில்லா சுற்றுலா பகுதியாகவும், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தவறாமல் பார்க்கும் ஒரு பகுதியாகவும் மெரீனா இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டிய நகரங்கள் குறித்த நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் சென்னை 26வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரின் மற்றொரு பெருமை துறைமுகம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை துறைமுகம் விளங்கி வருகிறது. பல இந்திய,சர்வதேச நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உருவாக முக்கிய காரணம் சர்வதேச தரமுள்ள துறைமுகமும், விமான நிலையமும் என்பது குறிப்பிடத்தக்கது
தென்னிந்தியாவில் பெங்களூர், ஐதராபாத் நகரங்களை அடுத்து தகவல் தொழில்நுட்ப நகரமாக சென்னை விளங்கி வருகிறது. .சென்னை தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்று. சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது.
வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றிருப்பது சென்னை தான். பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இந்திய ரயில்வேயின் முதன்மையான ரயில் உற்பத்தி தொழிற்சாலையாகும். அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , ஃபோர்டு , மிட்சுபிசி, டி.ஐ மிதிவண்டிகள், எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ, ரினல்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.
சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவில், திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் முருகன் கோவில் என பல பழமையான கோவில்கள் உள்ளன. மேலும் சாந்தோம் தேவாலயம் உள்பட பல தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகளும் வழிபாட்டு தலங்களாக உள்ளன.
சென்னை நகரம் மாணவர்களுக்கு சொர்க்கபுரியாக உள்ளது. சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும், அண்ணா பல்கலைக்கழகமும் , இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். மேலும் பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைகழகங்களும் மருத்துவ கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, S.I.E.T கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்ற போன்ற பல கலை அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த சென்னை இன்று 378வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சென்னை மக்களுக்க்கு மீண்டும் நமது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்