'நாடோடிகள் 2'  படத்திற்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

சசிகுமார், அஞ்சலி நடிப்பில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய ’நாடோடிகள் 2’ என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.

இந்த நிலையில் திடீரென இந்த படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உரிமை வழங்கும் ஒப்பந்தத்தை மீறிய வழக்கு ஒன்றில் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த படம் குறித்து எப்எம் பைனான்ஸ் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நாடோடிகள் 2’ படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தின் தமிழக, புதுவை உரிமையைத் தனக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்து 5.25 கோடிக்கு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் பல தவணைகளாக 3.5 கோடி பணத்தை தயாரிப்பாளருக்கு வழங்கியதாகவும் ஆனால் இந்த படத்தின் உரிமையை வேறு ஒரு நிறுவனத்திற்கு படத்தயாரிப்பாளர் கொடுத்து விட்டதாகவும் இதனால் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.