18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது

இந்த வழக்கில் 18 எம்.எல்.ஏக்களுக்காக பிரபல வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் அவர்களும், மு.க.ஸ்டாலின் தரப்பில் கபில்சிபல் அவர்களும், பிரபல வழக்கறிஞர் அரிமாசுந்தரம் சபாநாயகர் தனபால் சார்பிலும், எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வவத்தியநாதன் என்ற சீனியர் வழக்கறிஞரும், கவர்னர் சார்பில் ராகேஷ் திவாதி என்பவரும், தமிழக அரசு சார்பில் சுப்பிரமணியம் பிரசாத் என்பவரும் வாதாடினர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தபின்னர் 'நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும், இந்த வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைச்செயலாளர், முதலமைச்சர், அரசு கொறடா ஆகியோர் அன்றைய தினம் பதிலளிக்கவும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.