ஆன்லைன் அலப்பறைகள்… கற்றலைவிட சாட்டிங்கே அதிகம் நடப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட்!

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. இதனால் கற்றல் திறன் குறைந்துபோய் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் கற்றல் திறன் குறித்து தேசிய நல ஆணையம் நடத்திய ஆய்வில் இந்தியா முழுக்க வெறும் 10.1% குந்தைகளே செல்போனை ஆன்லைன் வகுப்புகளுக்காகப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

கொரோனா காரணமாக தற்போது அனைத்து பள்ளிக் குழந்தைகளிடமும் ஆன்ட்ராய்ட் செல்போன் தவழும் நிலையில் தற்போது சாட்டிங் மோகம் அதிகரித்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் 52.9% குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட சாட்டிங்கில் மும்முரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதைத்தவிர 10 வயதில் இருக்கும் 37.8% பள்ளி குழந்தைகள் இப்போதே ஃபேஸ்புக் பயன்படுத்த துவங்கி விட்டனர்.

மேலும் 8-18 வயதுடைய 30% பள்ளிக் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தத் துவங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் கற்றல் திறன் மிகவும் குறைந்துபோய் இருப்பதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் கடும் அதிர்ச்சியை வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்து வருத்தம் தெரிவித்த அதிகாரிகள் ஆன்லைன் வகுப்பு நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளிடம் செல்போனை கொடுக்க வேண்டாம் என்றும் பள்ளி குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்த தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.