நாங்கள் 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள். சசிகலா ஆவேச பேச்சு

  • IndiaGlitz, [Monday,February 13 2017]

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்பதில் குழப்ப நிலை கடந்த ஒரு வாரமாக நீடித்து வருகிறது. எம்.எல்.ஏக்களின் ஆதரவை வைத்துள்ள சசிகலாவை கவர்னர் இதுவரை அழைக்கவில்லை. மிரட்டி ராஜினாமா செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தும் ஓபிஎஸ் அவர்களுக்கும் கவர்னர் எந்தவித பதிலை கூறாமல் அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில் சற்று முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது: அதிமுகவை பிரித்தாள ஒருசிலர் நினைக்கிறார்கள். இன்றல்ல மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த அன்றே அதிமுகவை பிரிக்க நினைத்தார்கள். ஜெயலலிதா மறைந்த தினத்தன்று நீங்கள் தான் முதலமைச்சராக வேண்டும் என எல்லோரும் என்னை வலியுறுத்தினார்கள். ஆனால் நான் அன்று ஓபிஎஸ் தான் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்றும் ஏற்கனவே இருந்த அமைச்சரவையையே தொடரவும் சொன்னேன்
நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சர் ஆகியிருக்கலாம், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஜெயலலிதா இறந்த துக்கத்தில் முதலமைச்சராக எனக்கு விருப்பமில்லை. உண்மை நிலையை தொண்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இப்போது விளக்கம் அளிக்கிறேன்
அதிமுகவில் பிளவு ஏற்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அதிமுகவிற்கு விசுவாசமாக பன்னீர்செல்வம் இல்லை, பிரித்து ஆள நினைக்கிறார். நாங்கள் இதுபோன்ற 1000 பன்னீர்செல்வத்தை பார்த்தவர்கள். எப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பேசி வருகிறார்.