அவர் ஒரு கொலைகாரர்தான், ஆனாலும் எனது நண்பர்… பிரபல அதிபர் குறித்து டிரம்ப் கருத்து!

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த டெனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “அவர் ஒரு கொலையாளி, ஆனால் எங்களுக்கு இடையில் நல்ல உறவு இருந்தது“ என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் எங்களது நட்பு பாதிக்கப்பட்டதற்கு கொரோனா நோய்த்தொற்றுதான் காரணம் என்று அவர் தெரிவித்து இருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. 

முன்னதாக கொரோனா நோய்த்தொற்றிற்கு காரணம் சீனாதான் எனக் குற்றம் சாட்டிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவின் ஒரு ஆய்வகத்தில் இருந்தே கொரோனா நோய்த்தொற்றுப் பரவியது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் நோய்ப் பரவலுக்கு என்ன காரணம் என்பது குறித்து WHO விசாரணை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். அதோடு விடாமல் நோய்ப்பரவலின் ஆரம்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு புலனாய்வு குழுவையும் அவர் ஏற்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்து ஃபாக்ஸ் சேனலில் பேசிய டிரம்ப், உலகம் முழுக்க பல லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர் சீன அதிபர். ஆனாலும் எங்களுக்குள் நல்ல நட்புறவு இருந்தது. இந்த நட்பு உடைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது கொரோனா நோய்த்தொற்றுதான் எனத் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா நோய்ப்பரவல் குறித்து சீனாவின் மீது டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் வலிமையான குற்றச்சாட்டை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனாலும் இதற்கு முன்பே  தேசிய பாதுகாப்பு உத்தி தொடர்பான விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றையொன்று எதிரிகளாகவே கருதிவந்தனர்.

தற்போது கொரோனா நோய்ப்பரவலின் ஆரம்பம் குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் தற்போதைய அமெரிக்க அதிபருக்கு சீன அதிபரைப் பார்த்தால் பயம். அதனால்தான் கொரோனா பரவலின் தோற்றம் குறித்த விசாரணை செய்தவற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனால் கொரோனா பரவலின் தோற்றம் குறித்து டிரம்ப் மீண்டும் தனது குற்றச்சாட்டை சுமத்த துவங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.