தமிழ் சினிமாவில் 25 வருடம் கோலோச்சிய சின்னக் கலைவாணர் விவேக்… சாதித்தது என்ன?

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

தன்னுடைய காமெடியால் போகிறப் போக்கில் சமூகக் கருத்துக்களை அள்ளித் தெளிவித்து விட்டுச் செல்ல கூடியவர் நடிகர் விவேக். இவருடைய தனிப்பட்ட பாணி மூலம் தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவை மட்டுமல்ல ஓரளவு சமூக விழிப்புணர்வு கருத்துக்களும் குடிக்கொண்டு விட்டன என்றால் அது மிகையாகாது. மேடை நாடகத்தில் தொடங்கிய இவரது நடிப்பு வாழ்க்கை “பத்மஸ்ரீ” அளவிற்கு உயர்ந்த கதைக்குப் பின்னால் அவருடைய அயார உழைப்பை விடவும் சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் ஒரு முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது என்றே கூறப்படுகிறது.

19 நவம்பர் 1961 இல் கோயில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரைச் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன் மற்றும் மணியம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தவர்தான் விவேகானந்தன். இந்த நபரே பின்னாட்களில் ரசிகர்களால் “சின்னக் கலைவாணர்“, “மக்களின் கலைஞன்“ எனும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஆசிரியர் தந்தைக்கு பிறந்த நடிகர் விவேக் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம், அடுத்து எம்.காம் படித்து, மதுரையிலேயே சிறிதுகாலம் தொலைபேசி ஆப்ரேட்டராகப் பணிபுரிந்துள்ளார்.

 

பின்னாட்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றிப்பெற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஜுனியர் உதவியாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். இந்நாட்களில்தான் அவருடைய வாழ்க்கை மடைமாற்றம் அடைந்து இருக்கிறது. மேடை நாடகத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு மேடைகளில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படியான ஒரு தருணத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து இருக்கிறது. இந்த அறிமுகம் கொடுத்த பலனால் கடந்த 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக “மனதில் உறுதி வேண்டும்” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிகர் விவேக் தோன்றினார்.

 அடுத்து இயக்குநர் பாலச்சந்தரின் இயக்கத்திலேயே 1989 ஆம் ஆண்டு “புதுப்புது அர்த்தங்கள்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமா வெளிச்சத்தில் தள்ளத்தளிக்க ஆரம்பித்தார் நடிகர் விவேக். அந்தப் படத்தில் நடிகர் விவேக் கூறிய “இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு… ” என்ற நகைச்சுவை காமெடி இன்றைய தமிழ் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு சித்திரமாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு நகைச்சுவை என்ற வடிவத்திற்குள் சமூகக் கருத்துகளை அள்ளித் தெளித்துவிடும் திறமையை இயல்பிலேயே நடிகர் விவேக் கொண்டு இருந்தார்.

இப்படியான சிந்தனையில் “பாளையத்து அம்மன்”, “லவ்லி”, “அள்ளித்தந்த வானம்“, “யூத்‘’, ‘காதல் சடுகுடு”, “விசில்”, “காதல் கிசு கிசு”, “பேரழகன்”, “சாமி”, “விடுதலை” என்று அடுத்தடுத்து பல வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை சிந்திக்க வைத்தார். அதோடு சினிமாவில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் நடிகர் விவேக். லஞ்சம், வறுமை, மூடநம்பிக்கை எனப் பலவற்றையும் பேசிய நடிகர் விவேக் இதற்கு தன்னாலான முன்னெடுப்புகளையும் செய்து வந்தார்.

இப்படி அவர் எடுத்த முயற்சித்தான் ஒருகோடி மரக்கன்றுகள் நடுதல் எனும் திட்டம். ஒரு கலைஞனாக மட்டும் அல்லாது சமூக அக்கறையுள்ளவன் எனும் முறையில் பல கலைஞர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் நடிகர் விவேக். இப்படியான முயற்சிக்கு இந்திய அரசு கொடுத்த அங்கீகாரம்தான் “பத்மஸ்ரீ” விருது. இதோடு 2002 ஆம் ஆண்டு “ரன்“, 2003 இல் “சாமி“, 2004 இல் “பேரழகன்”, 2007 இல் “சிவாஜி” திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபில்பேர் விருதுகளையும் அள்ளிக் குவித்து இருக்கிறார்.

மேலும் “உன்னருகே நானிருந்தால்“, 2002 இல் “ரன்”, 2003 இல் “பார்த்திபன் கனவு“, 2007 இல் “சிவாஜி” போனற் திரைப்படங்களுக்காக தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளையும் பெற்று இருக்கிறார். அதோடு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தேசிய தமிழ் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான “எடிசன் விருது”, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான “கொடைக்கானல் பண்பலை வானொலி விருது”, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான “ஐ.டி.எஃப்.ஏ ” விருது எனப் பலவற்றிற்கும் சொந்தக்காரர்தான் நடிகர் விவேக்.

1990 களில் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே தோன்றிய இவர் “சொல்லி அடிப்பேன்” படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப் படம் ஒருசில காரணங்களால் வெளியாகாத நிலையில் “நான்தான் பாலா”, “பாலக்காட்டு மாதவன்” போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்லப் பெயரைப் பெற்று தந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ் சினிமாவில் என்.எஸ். கிருஷ்ணனுக்குப் பிறகு வெறுமனே காமெடி என்று இல்லாமல் சமூகத்திற்காகவும் யோசித்த அவர் ரசிகர்களால் சின்னக் கலைவாணர் என்ற அழைக்கப்பட்டதில் பெரிய வியப்பேதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் ஆதிக்கம் செலுத்தி நடிகர் விவேக் இன்றுகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார். இந்த இழப்பு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல தமிழ் சினிமா உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.