தாதா சாகேப் பால்கே விருது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஈபிஎஸ், முக ஸ்டாலின்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சற்று முன்னர் மத்திய அரசு திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அளித்தது என்பது தெரிந்ததே. மத்திய அமைச்சர் ஜவடேகர் அவர்கள் சற்று முன் இந்த அறிவிப்பை அறிவித்ததில் இருந்து ரஜினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நான் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன். திரைத்துறையில் தங்களது கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது: இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.