நகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு!
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை 110 விதியின்கீழ் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கொரோனா ஊரடங்கினாலும் இயற்கைப் பேரிடர்களாலும் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளில் இருந்து தமிழக விவசாயிகளைக் காக்கக் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். இதன்மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
அந்த வகையில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. சட்டப்பேரவையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்து இருந்தார்.
மேலும் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள நகை கடன் விவரங்களை அனுப்புமாறு தற்போது கூட்டுறவுத்துறை வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.