Download App

Comali Review

மனிதநேயத்தை புரிய வைக்கும் புத்திசாலி

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'கோமாளி; திரைப்படத்திற்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இந்த படம் நிறைவு செய்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்

16 வருடங்கள் கோமாவில் இருந்த ஒருவன் திடீரென கண்விழித்தால் இன்றைய டெக்னாலஜியை பார்த்து அதிர்ச்சி அடைவதும், ஆச்சரியம் அடைவதும் தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை. ஆனால் என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும்  மாறாதது ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் உள்ளது, அதுதான் மனிதம் என்பதை இயக்குனர் மிக அழகாக கூறியுள்ளார்.

ஜெயம் ரவிக்கு பள்ளிப்பருவம் மற்றும் கோமாவில் இருந்து மீண்டெழுந்த நடுத்தர வயது பருவம் என இரண்டு கெட்டப்புகள். 90களில் இருந்த மாணவர்களின் உணர்வை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். கோமாவில் இருந்து மீண்டு எழுந்தவுடன் செல்போன், கம்ப்யூட்டர், ஃபேஸ்புக், ஆகியவற்றை அதிசயமாக பார்ப்பது, தன்னுடைய பொக்கிஷத்தை கண்டுபிடிப்பது, அதை மீட்க போடும் திட்டங்கள் என கொடுத்த கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளார். மனிதநேயம் குறித்து அவர் பேசும் வசனங்கள், யோகிபாபுவுடன் சேர்ந்து செய்யும் காமெடி, பள்ளிக்காதல், காஜல் அகர்வாலுடன் ரொமான்ஸ் என ஜெயம் ரவி நடிப்பில் அசத்தியுள்ளார்.


காஜல் அகர்வால் இந்த படத்தை எப்படி ஒப்புக்கொண்டார் என்றே தெரியவில்லை, ஒரு பெரிய நாயகி நடிக்கக்கூடிய அளவுக்கு அவரது கேரக்டரில் ஒன்றுமே இல்லை. நல்ல நடிகையாக இருந்தாலும் அவரது நடிப்பிற்கு தீனி போடும் காட்சியே இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

சம்யுக்தா ஹெக்டே, ஜெயம் ரவியின் பள்ளி காலத்து காதலியாகவும், 16 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் இந்த கேரக்டரை கொச்சைப்படுத்தாமல் காமெடியாக இயக்குனர் கொண்டு சென்றது சிறப்பு

படத்தின் மிகப்பெரிய பிளஸ் யோகிபாபு. ஒன்லைன் காமெடியாகட்டும், இடையிடையே சிந்திக்க வைக்கும் சில அறிவுரைகள் ஆகட்டும் அவரது கேரக்டர் மனதில் பதியும் வகையில் உள்ளது. இன்றைய பரபரப்பான உலகை அவர் கிண்டலடிக்கும் ஒவ்வொரு காட்சியும் சூப்பர். குறிப்பாக நாம் சின்ன வயசில குளிப்போமே, அந்த குளத்திற்கு போவோமா? என ஜெயம் ரவி கேட்க, அதற்கு யோகிபாபு, அதுமேலதான் நாம இப்ப நடந்து போய்கிட்டு இருக்கோம்' என்று கூறுவதும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

கே.எஸ்.ரவிகுமார் வில்லத்தனத்துடன் கூடிய ஒரு அரசியல்வாதி கேரக்டரில் நடித்துள்ளார். சம்யுக்தாவின் கணவராக ஷா ரா, ஜெயம் ரவியின் சகோதரியாக ஆனந்தி என அனைவரும் தங்களுடைய கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் 'யார்ரா கோமாளி', மற்றும் 'நண்பா நண்பா' ஆகிய பாடல்கள் கேட்கும் வகையில் உள்ளது. பின்னணி இசையிலும் எந்த குறையும் சொல்ல முடியாது


இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், படம் முழுக்க இந்த கோமா விஷயத்தை கொண்டு சென்றுவிடுவார் என்று தான் முதலில் நினைக்க தோன்றியது. ஆனால் அதை ஒரு கட்டத்தோடு நிறுத்திவிட்டு சிலை விஷயத்தை திடீரென புகுத்தி அதை மையப்படுத்தி கதையை கடைசி வரை நகர்த்தி சென்றுள்ளார். ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக நாஞ்சில் சம்பத் காட்சியை வைத்துள்ளார். அம்மா, அப்பா கூடவே வாட்ஸ் அப்பில் பேசுவதை குத்திக்காட்டி 'இத்தனை வருஷம் கோமாவில் இருந்தது நானில்லை, நீங்கள் தான்' என்ற வசனம் மூலம் இன்றைய மனிதர்கள் நட்பையும் உறவையும் தொலைத்துவிட்டு இண்டர்நெட்டில் மூழ்கியிருப்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறார். 'நான் இருக்கின்றேன்' என்ற தைரியமான ஒரு வார்த்தை எவ்வளவு மகத்தானது என்பதையும், 'சாப்பிட்டியா? தூங்குனியா? என்ற கேள்வியை அம்மாவை தவிர இந்த உலகத்தில் யார் கேட்பார்கள்? போன்ற வசனங்கள் நெகிழ்ச்சியானவை. 

என்னதான் டெக்னாலஜி வானளவு வளர்ந்தாலும் இயற்கை சீற்றத்தின் முன் நிற்க முடியாது என்பதை சென்னை வெள்ளத்தின் போது நாம் உணர்ந்தோம். அதை இந்த படத்தின் காட்சியோடு இணைத்து, 'ஒரு பிரச்சனை வரும்போது ஒன்று சேரும் நாம், எப்போதுமே அப்படி இருந்தால் என்ன? என்ற கேள்வியையும் இயக்குனர் எழுப்பியுள்ளார். 'மனிதம்' ஒன்றுதான் கடைசி வரை மாறாதது என்பதை 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்தமாக பதிய வைக்கின்றார் இயக்குனர். பேசுவதற்கு ஆள் இல்லாமல் தவிப்பவர்களிடம் நாலு வார்த்தை ஆறுதலாக பேசினால் அதனால் ஏற்படும் சந்தோஷம் குறித்து யோகிபாபுவின் மகன் மற்றும் பிஜிலிரமேஷ் ஆகிய கேரக்டர் மூலம் புரிய வைக்கின்றார். மொத்தத்தில் டெக்னாலஜியால் மறந்து போன மனிதத்தை தட்டியெழுப்பிய இயக்குனருக்கு பாராட்டுக்கள். இருப்பினும் சிலையை திருடும் மொக்கை காட்சியை கொஞ்சம் புத்திசாலித்தனமாக செய்திருக்கலாம், அதேபோல் இரண்டு பாடல்கள் இந்த படத்திற்கு தேவையில்லை என்ற உணர்வும் ஏற்படுகிறது

மொத்தத்தில் இன்றைய டெக்னாலஜியால் உறவை தொலைத்து, மனித நேயத்தை தொலைத்து வாழும் நமக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பாடம் தான்.

இந்த கோமாளி நிச்சயம் புத்திசாலிதான்

Rating : 3.0 / 5.0