இந்தியாவில் தொடரும் பணவீக்கம் – யாரெல்லாம் பாதிக்கப் படுவார்கள்?
ஒரு நாட்டில் நிலவும் பணவீக்கம் (Inflation), பணவாட்டம் (Deflation) இரண்டுமே கடுமையான பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தும். இந்தியாவில் தற்போது பொருட்களின் விலை அதிகரித்து இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். விலை அதிகரிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. கச்சா எண்ணெயின் விலையேற்றம், காய்கறிகளின் விலையேற்றம், தொழில் கனரக வாகனங்களில் செலவீனங்கள் போன்றவை இத்தகைய பண வீக்கத்துக்கு காரணமாகக் கருதப்படுகிறது. இந்த நிலைமையைக் குறித்து தொரிந்து கொள்வதற்கு அடிப்படையில் சிறுது பொருளாதாரத்தையும் அறிய வேண்டியது அவசியம். முதலில் பணவீக்கம், பணவாட்டம், பொருளின் உற்பத்தி, நுகர்வு, இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்டால் தான் நமது பொருளாதார நிலைமையைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
பணவீக்கம் (Inflation)
பொதுவாக பணவீக்கம் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப் படுகின்றன. பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப் படுகின்ற பணத்தின் மதிப்பு குறைவதால் பணவீக்கம் அதிகமாகிறது என்றும் மக்களிடம் அதிக அளவு பணப்புழக்கம் இருப்பதால் பண மதிப்பு குறைகிறது என்றும் பொதுவாக பணவீக்கத்தை குறித்துக் கருத்துக்கள் சொல்லப் படுகின்றன.
பொது மக்களிடம் அதிகளவு பணம் புழக்கத்தில் இருக்கும் போது எந்தப் பிரச்சனையும் வராது என்று கூட நினைக்கலாம். அடிப்படையில் இது தவறான பொருளாதார அணுகுமுறையாகும். மக்களிடம் அதிகமாக பணம் இருந்தாலும், கடைத் தெருவில் விற்கும் பொருட்களின் விலை அதிகமாகிறது என்பதைக் கவனிக்க தவறக் கூடாது. அதிக அளவு பணப் புழக்கம், பொருட்களின் விலையையும் அதிகப்படுத்தி விடுகிறது.
இதெப்படி நடக்கும்? நான் ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். திடீரென எனக்கு இரண்டு மடங்காக சம்பளம் உயர்த்தப் படுகிறது. இவ்வளவு நாளும் ஒரு சாதாரண விடுதியில் தங்கி கொண்டிருந்த நான், தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்க ஆரம்பிக்கிறேன். உயர்தர சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் இப்போது இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. இதன் அர்த்தம் என்ன? நான் பயன்படுத்தும் பொருளின் அளவுகள் அதிகமாகின்றன. ஒரு தனி ஆளுக்கு மட்டும் இந்த நிலைமை என்றால் நாட்டில் உள்ள அனைத்து நபர்களின் கைகளிலும் பணப் புழக்கம் அதிகமாகும் போது பொருட்களின் தேவை அதிகரிக்கும். பொருட்களின் தேவை அதிகரிக்கும் போது தயாரிப்பு பொருட்களுக்கான மூலதனத்தின் தேவையும் அதிகமாகும். தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு ஆகும் செலவை விடவும் பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்று போட்டிப் போட்டுக் கொண்டு விலையை அதிகப் படுத்தி விடுவார்கள். இது சங்கிலித் தொடர்போல இழுத்துக் கொண்டே இருக்கும்.
அரசாங்கம் எவ்வளவு பணத்தை அச்சடிக்கலாம் என்ற வரையறை இருக்கிறதா? என்பது அடிப்படையான ஒரு கேள்வி. உண்மையில் இதற்கு எந்த வரையறையும் கிடையாது. எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் ஒரு அரசாங்கம் அச்சடிக்கலாம். சில நேரங்களில் ஒரு அரசு தனது உற்பத்தி பொருட்களை விட அதிக அளவு பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விட்டு விடுகிறது என வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? ஒரே நேரத்தில் அனைவரும் பணக்காரர்கள் ஆகி விடுவோம். இப்படி ஒரு அரசாங்கம் செய்தால் அந்த நாட்டில் பணத்தின் மதிப்பு அடிமட்டத்திற்கு குறைந்து பணம் என்பது வெறும் காகிதமாகிவிடும். அதே நேரத்தில் விற்பனையாளர்கள் பொருட்களை விலையை அதிகப் படுத்தி விற்பனை செய்வார்கள். விற்பனையாளர்கள் மட்டுமல்ல நாம் செய்யும் வேலைக்கான சம்பளத்தை நமது நிறுவனங்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டி வரும்.
அதிகபணம் – பொருட்களின் விலை உயர்வு – சம்பள உயர்வு – அதிகரிக்கும் செலவு – அரசாங்கத்தின் திட்டத்தின் செலவு அதிகம் – கடைசியில் இது அத்தனையும் அரசாங்கத்தின் தலையில்தான் விடியும். பணவீக்கத்தை அரசாங்கம் சரி செய்ய முற்படும் போது கஜானா காலியாகும். காலியான கஜானாவை வைத்துக் கொண்டு ஒரு அரசாங்கம் சரியாக செயல்பட முடியாது. பணவீக்கம் ஒரு நாட்டை அதள பாதாளத்திற்கு தள்ளிய வரலாறுகளும் நடந்திருக்கிறது.
சில நேரங்களில் பெரு முதலாளிகளும் பண வீக்கத்திற்கு காரணமாக மாறிவிடுகின்றனர். தனது பொருளுக்கான தேவையை அதிகப்படுத்தும் பொருட்டு குறைந்த பொருட்களை தயாரித்து புழக்கத்தில் விடுகின்றனர். (உதாரணமாக – Bugatti நிறுவனம் உலகின் மிகச் சிறந்த கார் என்று 5 காரை தயாரிக்கிறது. ஒரு காரின் விலை 50 கோடி என வைத்துக் கொள்வோம். இப்போது என்னவாகும்? வெறுமனே கார்தான். அதற்கு உலகம் முழுவதும் தேவை அதிகரிக்கிறது. எனவே அந்த காருக்கு 50 கோடி என நிர்ணயிக்கப் படுகிறது. இது மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோல், வண்டி வாகனங்களை காரணம் காட்டி வணிகர்கள் குறைந்த பட்சம் பொருட்களின் விலையை கூட்டிக் கொண்டே வருவார்கள். சில நேரங்களில் சென்ற ஆண்டில் உற்பத்தி செய்யப் பட்ட ஒரு பொருளில் சிறு மாற்றத்தை செய்து இந்த வருடம் அதிகமான விலைக்கும் விற்கப்படும்.
உற்பத்தி செய்தால் தானே பிரச்சனை, உற்பத்தி செய்யாமல் விட்டு விட்டால்??? ஒரு நிறுவனம் தனது கடையை காலி செய்து எதையும் உற்பத்தி செய்யாமல் அமைதியாக இருந்துவிடுகிறது, என்ன நடக்கும்? அந்த கார் விற்பனை நின்று விடுவதால் மற்ற நிறுவனங்களின் கார்களுக்கு தேவை அதிகமாகும். தேவையை காரணம் காட்டி மற்ற நிறுவனங்கள் காரின் விலையை அதிகப்படுத்தி விடுவர். இப்படி ஒவ்வொரு காரணிகளும் ஒரு நாட்டின பணவீக்கத்துக்கு காரணமாக இருக்கிறது.
நமது பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவில் ஒவ்வொரு பொருளும் வருடத்திற்கு 6% விலையை அதிகரிக்கப் படுகிறது என கணித்திருக்கிறார்கள். அதே போல ஒரு நாட்டில் பணவீக்கமே இருக்கக் கூடாதா என்றால், அதுவும் தவறு. குறைந்த பட்சம் 2.5% ஆக பணவீக்கம் இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். பணவீக்கம் இருந்தால் தான் வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்க முடியும் எனவும் சொல்லப் படுகிறது.
பணவீக்கம் எந்த அளவிற்கு கொடுமையானது என்பதை இப்போது வெனிசுலாவின் தொலைக்காட்சிகளைப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அந்நாட்டில் கடுமையான பணவீக்கம் நிலவி வருகிறது. அந்நாட்டில் 1 மில்லியன் வரைக்கும் நோட்டுகளாகவே அச்சடிக்கப் படுகின்றன. ஆனால் அந்த 1 மில்லியன் நோட்டை வைத்துக் கொண்டு ஒரு டீயைக் கூட வாங்க முடியாது. அதே போல இரண்டாம் உலகப் போர் சமயங்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கடுமையான பணவீக்கம் இருந்து வந்தது. அந்த சமயத்தில் ஒரு ஐந்து விறகை வாங்க 5 மூட்டை பணம் செலவழிக்க வேண்டி வந்தது. எதற்கு அவ்வளவு பணத்தைக் கொடுத்து விறகை எரிப்பானேன்? பணத்தையே அடுப்பில் கொட்டி விடலாம் என நினைத்த மக்கள் பணத்தைக் கொட்டித்தான் அடுப்பை எரித்திருக்கிறார்கள்.
எல்லா நேரங்களிலும் பணத்தின் கையிருப்பு அதிகமாக இருப்பதால் மட்டுமே பணவீக்கம் ஏற்படும் எனவும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பொருட்களின் விலையேற்ற நிலைமை அதன் தேவையைப் பொருத்தும், அதன் உற்பத்தியையும் பொருத்தும், உற்பத்திக்குப் பின்னால் வண்டி, வாகனங்கள், கச்சாப் பொருட்கள், மூலதனம் போன்றவற்றைப் பொருத்தும் அமைகிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பணவாட்டம் (Deflation)
மக்களிடம் பணம் அதிகமாக இருக்கும் போது தான் பொருளின் விலை அதிகமாகி பல பிரச்சனைகளை கிளப்பி விடுகிறது. சரி மக்களிடம் பணம் இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும்? பணம் இல்லாமல் எந்த பொருளும் விற்பனையாகாது. பொருளின் விற்பனை குறையும் போது வணிகம் பாதிக்கப் படும். வணிகர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எப்படியாவது விற்க வேண்டும் என நினைத்து மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப முதலில் குறைவான விலைக்கு விற்பனை செய்ய முயற்சி நடக்கும். அதுவும் கடைசியில் அரசாங்கத்தின் தலையில் தான் விடியும். கஜானா காலியாகும். அதே சங்கிலித் தொடர் பிரச்சனை தான்.
இந்தியாவில் பொருளாதார நிலைமை
இந்தியாவில் தற்போது நிலவும் பண வீக்கத்திற்கு அடிப்படையில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொருட்களின் உற்பத்தி குறைவு, தேவை அதிகம், மூலதனப் பொருட்களின் விலை ஏற்றம், பெட்ரோல் கனரக வாகனங்களுக்கான செலவீனங்கள் அதிகரிப்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. சில்லறை பொருட்களின் பணவீக்கத்தின் அளவு அதிகரித்து இருப்பது ஏழை, எளிய மக்களிடம் கடுமையான பதட்டத்தை உண்டாக்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு அதிகப் பட்சமாக வெங்காயத்தின் விலை ரூ.100 ஐ தொட்டது. இதனால் வெங்காயத்தின் விலை 293% அதிகரித்து இருந்தது. இதே போல காய்கறிகளின் விலையும் ஏறு முகத்திலேயே இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
சில்லறை பொருட்களின் பணவீக்கம்
சில்லறை பணவீக்கம் என்பது உணவு, குளிர்பானம், புகையிலை, ஆடை, வீட்டுமனை போன்ற பொருட்களை வைத்து கணக்கிடப் படுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. காய்கறிகளின் பணவிக்கம் 52.72% ஆகவும் வெங்காயத்தின் விலை 293% ஆகவும் உருளைக்கிழங்கு 87.84% ஆக இருப்பதாகவும் தற்போது கணிக்கப் பட்டுள்ளது.
சில்லறை பணவீக்கம் 2020 பிப்ரவரியில் 7.59% ஆக அதிகரித்து இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 2019 ஜனவரியில் 2.05% ஆக இருந்த பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 7.35% ஆக அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த ஆண்டு வெறுமனே 10 மாதங்களில் அதிகபடியான பணவீக்கத்தை அனுபவித்திருக்கிறோம்.
இந்தியாவில் கடந்த 2014 இல் 8.3% பணவீக்கம் நிலவியது. இந்தியாவில் இதுவே அதிகளவிலான பணவீக்கமாகக் கணிக்கப் பட்டது. 2014 அடுத்து தற்போது 2020 ஜனவரியில் இருந்து அதிக அளவு பணவீக்கம் நிலவுவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மொத்த விலை பணவீக்கம்
முக்கியப் பொருட்கள், எரிபொருட்கள், எரிசக்தி மற்றும் தயாரிக்கப் பட்ட பொருட்கள் ஆகியவை கொண்டு மொத்த விலைகளுக்கான பணவீக்கத்தை நாம் கணக்கிட்டு வருகிறோம். நம் நாட்டில் மட்டும் தான் இந்த நடைமுறை நிலவுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தக் கணக்கீட்டு முறை குறித்து அவ்வபோது கேள்வியும் எழுப்பப் பட்டு வருகிறது.
மொத்த விலைக் குறியீடு (WPI) கடந்த 2019 ஜனவரியில் 2.76% ஆகவும், 2019 டிசம்பரில் 2.59% , அதிகபட்சமாக ஏப்ரலில் 3.18 சதவீதமாகவும் இருந்தது. இந்த ஆண்டு இந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. 2020 ஜனவரியில் 11.52% ஆகவும் தறபோது 13.54% அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத அளவிலேயே மொத்த பணவீக்கத்தின் அளவு 0.34% அதிகரித்துள்ளது. Ministry of commerce and industry இதை உறுதிப் படுத்தி இருக்கிறது.
சில்லறை, மொத்த விலை இரண்டுமே இந்திய பொருளதாரத்தைப் பொருத்த வரையில் மிகுந்த வருத்தத்தை தருவதாகவே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். IRCA வின் முதன்மை பொருளாதார நிபுணரான அதிதி நாயர் 2020 இல் இந்தியாவின் பணவீக்கம் மிகவும் கவலை அளிக்கிறது. காய்கறிகளின் விலை சற்று குறைந்தாலும் இறைச்சியின் விலை ஏறுமுகத்திலேயே இருக்கும் எனத் தெரிவித்து உள்ளார்.
பொருளாதார வல்லுநர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்தும் கவலை தெரிவித்து வருகின்றனர். மொத்த உள்நாட்டு வளர்ச்சி குறைந்து காணப்படும் போது பணவீக்கம் இருப்பதுதான் கடினமான காரியமாக இருக்கிறது என்கின்றனர்.
சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது இரண்டும் நேரடியாக சாமானிய மக்களின் சமையலறையைத்தான் பாதிக்கும்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் கச்சா பொருட்களின் விலையேற்றம் அடுத்த காலாண்டில் பிரச்சனையை ஏற்படுத்துமா என்கிற ரீதியிலும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலைமையை சரிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து வருகிறது. ஆனாலும் சமானிய மக்களின் சமையலறை முதற்கொண்டு, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி நிலைமைகள் தற்போது கடும் கேள்விக்குறியாகி இருக்கிறது என்பது தான் உண்மை நிலவரம்.