இதை மட்டும் சாப்பிடவேண்டாம்… பிசிசிஐ உத்தரவால் வெடித்த சர்ச்சை!

இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அதில் வீரர்கள் ஹலால் இறைச்சியை சாப்பிடலாம் என்று கூறிய பிசிசிஐ, மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தவிர்க்க சொல்லி இருக்கிறது. இந்த விதிமுறைதான் பலதரப்புகளில் இருந்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அடுத்த ஜுன் வரை 6 நாடுகளில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் பாதுகாப்பு தொடர்பாக வீரர்கள் பயோபபுள் முறையை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். இதனால் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தவுள்ள பிசிசிஐ மேலும் சில புதிய விதிமுறைகளையும் வீரர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

அதில் உணவு தொடர்பான சில பரிந்துரைகளும் இடம்பெற்று இருக்கின்றன. இதனால் இந்திய வீரர்கள் ஹலால் என்று அங்கீகரிக்கப்பட்ட உணவை மட்டும்தான் சாப்பிட வேண்டும் மாட்டிறைச்சி பன்றி இறைச்சி ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது. இந்தக் கருத்துக்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

அதாவது ஹலால் உணவு என்பது இஸ்லாமிய மத நடைமுறையுடன் தொடர்பு கொண்டது. இந்த உணவுமுறையை மற்ற மதத்தினரை கடைப்பிடிக்க சொல்வதில் என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியில் அதிகச் சத்துகள் நிறைந்திருக்கின்றன. விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் இந்த வகையான உணவுகளை உட்கொண்டு வரும் நிலையில் அதற்கு தடை விதிப்பது எவ்விதத்தில் நியாயம் என்றும் பிசிசிஐ இந்த விஷயத்தில் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா? என்றும் அடுக்கடுக்கான விமர்சனத்தை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.