கொரோனா நுரையீரலை மட்டுமல்ல, மொத்த உடல் உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது!!! அதிர்ச்சித் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,May 14 2020]

 

கொரோனா பரவலின் ஆரம்பக்கட்டத்தில் இது நிமோனியாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தையே மருத்துவர்கள் எழுப்பினர். அடுத்தடுத்து இது சுவாசத்தைத் தடை செய்யும் கொரோனா வகை வைரஸ் என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டனர். ஏனெனில் முன்பு சார்ஸ், மெர்ஸ் வகை வைரஸ்களும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் நோயாகப் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் கொரோனாவும் சுவாச உறுப்புகளைத் தாக்கி அழிக்கும் வைரஸ் தொற்று நோயாகவே புரிந்து கொள்ளப்பட்டது.

மனிதனின் நுரையீரல் பகுதியில் காணப்படும் ACE2 புரதங்களைப் பற்றிக் கொள்ளும் விதத்தில் கொரோனா வைரஸ்கள் ஆற்றல் பெற்றவையாக இருக்கிறது. கொரோனா வைரஸ் கிருமிகள் முதலில் வாய், மூக்கு, கண் போன்ற உறுப்புகளின் வழியாக பரவி மனிதர்களின் நுரையீரல் சென்று நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துவதால் கொரோனா சுவாச உறுப்புகளைப் பாதிக்கும் வைரஸ் தொற்று எனப் பொதுப்படையாக புரிந்து கொள்ளப்பட்டது. தற்போது விஞ்ஞானிகள் கொரோனா சுவாச உறுப்புகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை, மனிதனின் மொத்த உடல் உறுப்புகளில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

நியூயார்க்கின் மோனாவால் வாஸ்குலர் மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 38 வயதுடைய நபர் ஒருவருக்கு காலில் இரத்த ஓட்டம் தடைபட்டு, கடுமையான உறைதலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சீன் வெங்கெர்ட்டர் கொரோனா பாதித்த இளம் வயதினருக்கு காலில் இரத்தம் உறைதல் மற்றும் குளிர்ச்சியாக உணர்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் கிருமிகள் நுரையீரலைத் தாக்குவதால் முதல் கட்டமாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையினால் பல உறுப்புகளிலும் இரத்த செல்கள் பாதிப்படைகின்றன. இரத்த செல்கள் பாதிக்கப் படுவதால் உடல் உறுப்புகள் நேரடியாக தாக்கப்படும். சில நேரங்களில் இரத்தச் செல்கள் உறைவதால் உடலில் ஆங்காங்கே கட்டிகள் தோன்றுவதாகவும் லாஜ் ஏன்ஜெல்ஸில் உள்ள சிடார்ஸ் சினாய் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இரத்த நாளங்களில் ரத்த செல்கள் உறைவதால் Blood Clot பாதிப்பும் ஏற்படுவதாக அமெரிக்க மருத்துவமனை ஒன்று ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய பாதிப்புகளினால் 20-50% கொரோனா நோயாளிகள் அங்கு இறந்து போவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் கால்களில் இரத்தம் உறைதல், குளிச்சியாக உணரப்படுதல், காலில் அரிப்பு, தோல் நிறம் மாறுபாடு, கண்கள் இளஞ்சிவப்பாக மாறுதல் மற்றும் கால்கள் வலுவிழந்து போதல் போன்ற பாதிப்புகள் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகின் பல இடங்களிலும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா பல வழிகளில் உடல் உறுப்புகளை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்து கிறது என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரக கேளாறு, இதய வீக்கம், நோய் எதிர்ப்பு மண்டலங்களில் பாதிப்பு போன்ற நேரடியான பாதிப்பையும் கொரோனா கொண்டு வருகிறது என்ற புதியத் தகவல்கள் தற்போது அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் கொரோனா பாதித்த இளம் நோயாளிகளுக்கு பக்கவாதம் மற்றும் நுரையீரல் வீக்கம் போன்ற குறைபாடுகள் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது குழந்தைகளை நேரடியாக தாக்கும் கவாசாகி போன்ற அறிகுறி கொண்ட Multi system disease என்ற வீக்கம் தற்போது அமெரிக்காவில் அதிகளவு பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கவாசாகி வீக்கம் அல்லது இளம் தலைமுறை கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் சைட்டோகைன் பிரச்சனையாக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். நியூயார்க் நகரில் மட்டும் 52 குழந்தைகளிடம் இந்த மர்மநோய் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய மர்மநோயைப் பற்றி அறிந்து கொள்வதற்கு குழந்தைகளைத் தாக்கும் 100 நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் நியூயார்க் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் கடுமையான அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தற்போது இந்த விளைவுகளும் கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு மேலும் கவாசாகி போன்ற நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குழந்தைகள் மற்றும் இளம் வயதுடைய கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று காணப்படும். கொரோனா நோய்த்தொற்று அவர்களின் உடலில் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் போது அதை எதிர்ப்பதற்காக நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகபடியான நோய் எதிர்ப்பு சுரப்பிகளை சுரக்கும். இந்த நோய் எதிர்ப்பு சுரப்பிகள் நுரையீரலில் சென்று தங்கி நீர்க்கோர்வையாக மாறுகிறது. நீர்க்கோர்வைகள் கட்டிகளாக உருமாறி அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்து கின்றன. இம்மாதிரியான சைட்டோகைன் பாதிப்புகளாலும் தற்போது இளம் கொரோனா நோயாளிகள் மற்றும் குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்படுதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.