close
Choose your channels

கொரோனா: சுவீடன் இன்றுவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை!!! காரணம் என்ன???

Saturday, May 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா: சுவீடன் இன்றுவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவில்லை!!! காரணம் என்ன???

 

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கைப் பிறப்பித்து கடும் பொருளாதார மந்தத்தைச் சந்தித்து வருகின்றன. ஆனால் சுவீடன் இதுவரை ஊரடங்கு என்ற வார்த்தையை உபயோகிக்கவே இல்லை. வெறுமனே அதிபரின் சில வேண்டுகோள்கள், அறிவுரைகள், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் மட்டுமே கொரோனா கட்டுப்பாடுகளாக அந்நாட்டில் கூறப்பட்டுள்ளன. கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்தே பல உலக நாடுகள் சுவீடனை பார்த்து வியந்தன. பக்கத்திலுள்ள அனைத்து ஐரோப்பிய நாடுகளும் கடும் ஊரடங்கை பிறப்பித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது சுவீடன் மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பூட்டப்பட்டிருந்த போது சுவீடன் தெருக்களில் மக்கள் ஐஸ் கீரிம்களை சாப்பிட்டுக் கொண்டும் தெருக்களில் உள்ள உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டும் தங்களது இரவு நேரத்தை இனிமையாகக் கழித்து வந்தனர். இதுகுறித்து, பிரதமர் கூறிய கருத்துக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும் மக்கள் சமூக விலகலை முறையாகக் கடைபிடிக்கின்றனர் என்றும் அந்நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு தெளிவுபடுத்தியது. மேலும், இந்நடவடிக்கைகளுக்கு நாட்டின் மக்கள் தொகையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

மக்கள் சமூக விலகலைக் கடைபிடித்தாலும் இதுபோன்ற சமயங்களில் இந்நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று சுவீடன் நாட்டின் கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் மருத்துவர் எம்மா ஃபிரான்ஸ் கூறுகிறார். தற்போது அமெரிக்காவிற்கான சுவீடன் நாட்டுத் தூதர் நோர்டிக் சுவீடன் தலைநகரத்து மக்கள் மே மாதத்திற்குள் கொரோனா நோய்க்கு எதிராக முழு எதிர்ப்பு சக்தியை அடைந்திருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். உலகமே கொரோனா பயத்தினால் கடும் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் சுவீடன் நாட்டின் அணுகுமுறை மிகவும் அச்சத்தை வரவழைப்பதாகச் சில வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

சமூக நோய் எதிர்ப்பு சக்தி

சுவீடன் அரசாங்கம் இதுவரை ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காததற்கு ஒரு முக்கியக் காரணம் சொல்லப்படுகிறது. அதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சமூகத்திலுள்ள அனைத்து மக்களின் உடலிலும் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகிவிட்டால் அவர்களை மறுபடியும் நோய் தாக்காது என்ற மருத்துவக் காரணியை அந்நாடு முழுமையாக நம்புகிறது. ஆனால் இந்த நம்பிக்கை குறித்து சமீபமாக உலகச் சுகாதார நிறுவனம் இது உறுதிப்படுத்தப்படாத தகவல் எனக் கருத்துத் தெரிவித்து இருந்தது.

இதுவரை சுவீடனின் தலைநகர் “ஸ்டாக்ஹோமில் சுமார் 30% மக்கள் கொரோனா நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பொது வானொலி (NPR) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆக அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து அவர்கள் மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மே மாதம் முடிவதற்குள் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுவிடுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படும் அனைவருக்கும் இந்நோய் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அதாவது நோய் பாதிப்பு ஏற்படுபவர்களில் சுமார் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்படுகிறது என முன்னதாக உலகச் சுகாதார நிறுவனம் தெளிவுபடுத்தியிருந்தது. அந்த 10 விழுக்காட்டில் குறைந்த 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே தீவிரச் சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த வழிமுறையை தற்போது சுவீடன் அரசாங்கம் முழுமூச்சோடு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதுவரை அந்நாட்டில் 21,520 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் 2653 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“அடுத்த மாத தொடக்கத்தில் நாங்கள் தலைநகரில் கொரோனா நோய்க்கு எதிராக சமூக எதிர்ப்பாற்றலை அடைய முடியும்’‘ என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. இந்த அறிக்கை தொடர்பாக தற்போது உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு பெருந்தொற்று பரவலாக தாக்கம் ஏற்படுத்தும் சமயத்தில் சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு பரவி அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவடையும். இப்படி சமூகத்தில் வாழும் பெரும்பாலானவர்களின் உடலில் அந்நோய்க்கு எதிரான எதிர்ப்பு ஆற்றல் வலுப்பெற்றால் நோய் கொஞ்சம் கொஞ்சமாக வீரியத்தை இழக்க நேரிடும். இந்த வழிமுறையைப் பயன்படுத்தி சுவீடன் கொரோனாவை ஒழித்துவிடலாம் என்று நம்புகிறது.

ஒரு பெருந்தொற்றுக்கு எதிராக அம்மக்களில் சுமார் 60 விழுக்காட்டினருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று United States இன் தலைமை அறிவியல் ஆலோசகர் சுட்டிக் காட்டுகிறார். இதுவரை சுவீடனில் 30% நோயில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துவது பற்றி தென் கொரியாவின் நிலைமையில் இருந்து கண்டுகொள்ள முடிந்தது. இந்நிலையில் “நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்’ போன்ற கருத்துக்களை உறுதியாக நம்ப முடியாது என WHO வும் அறிக்கை விட்டு இருக்கிறது.

ஒரு முறை கொரோனா நோயில் இருந்து மீண்டவருக்கு அவரது உடலில் 12 நாள் வரை கொரோனா எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் இதன் வலிமை, எவ்வளவு காலம் நீடிக்கும் இதுபோன்ற புரிதல்களை மருத்துவர்களால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருந்து வருகிறது. இத்தகைய சந்தேகங்களை எழுப்பும் போது சுவீடன் சுகாதாரத்துறை “நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட்” விஷயத்தில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது என ஒப்புக்கொள்கிறது. ஆனாலும் ஊரடங்கை பிறப்பிப்பது போன்ற திட்டங்களில் எந்த மாற்றத்தையும் சுவீடன் அரசாங்கம் செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

டென்மார்க் மற்றும் நார்வே உட்பட ஐரோப்பா முழுவதிலும் உள்ள நாடுகள் மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு பெரும் தடையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சுவீடனில் பள்ளிகள், உணவகங்கள், மால்கள் போன்றவை திறந்திருக்கின்றன. வயதானவர்கள் மட்டுமே வெளியே வருவதற்கு அந்நாட்டு அரசு தடைவிதித்து இருக்கிறது. பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் போன்றவை ஆன்லைனில் பாடங்களை நடத்தி வருகின்றன.

சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுவீடனில் வாழ்ந்து வருகின்றனர். ஊரடங்கு பிறப்பிக்காத நிலைமை குறித்து, மற்ற நாடுகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்து வந்தாலும் தனது சமூக நோய் எதிர்ப்பு சக்தி கொள்கையில் சுவீடன் வலுவான நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் சுகாதாரத்துறை “தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாகவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும்” குறிப்பிட்டு இருக்கிறது. சுவீடனுக்கும் பக்கத்திலுள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் கொரோனா பாதிப்பில் பெரிய அளவிலான வேறுபாடுகள் இல்லாத நிலையில் சுவீடனின் அணுகுமுறையில் நியாயம் இருக்கிறதோ? என்ற சிந்தனையும் தற்போது சில நாடுகளிடம் சுவீடன் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி முரண்பட்ட விமர்சனங்களுக்கு இடையில் சுவீடன் தனது இயல்பான கொரோனா நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.