இந்தியாவில் ஆகஸ்ட் 15 க்குள்ள கொரோனா தடுப்பூசி: இதில் இருக்கும் சிக்கல் என்ன???

  • IndiaGlitz, [Saturday,July 04 2020]

 

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என்ற மகிழ்ச்சி செய்தியை இந்திய மருந்துவ ஆராய்ச்சி கழகம் நேற்று வெளியிட்டு இருந்தது. பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் இரண்டும் இணைந்து COVIAXIN என்ற புதிய தடுப்பூசியை தயாரித்து இருப்பதாக கடந்த ஜுன் 30 ஆம் தேதி செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்திய மருத்துவக் கழகம் மனிதர்களின் மீதான சோதனைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

அதன் அடிப்படயில் COVIAXIN தடுப்பூசி வருகிற ஜுலை 7 ஆம் தேதி இரு கட்டமாக மனிதர்கள்மீது சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. கிளினிக்கல் சோதனையில் நம்பத்தக்க முடிவுகள் வெளியானால் உள்ளூரிலேயே கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கிளினிக்கல் சோதனையை விரைந்து நடத்த வேண்டும் என்றும் கிளினிக்கல் சோதனையை மேற்கொள்ள விருக்கிற மருந்துவ மனைகள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் ICMR நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

இதுகுறித்து ICMR வெளியிட்ட அறிவிப்பில் “பொது சுகாதார அவசர நிலை ஏற்பட்டு இருப்பதால் கொரோனா தடுப்பு மருந்தை உடனடியாக வெளியிட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கிளினிக்கல் டிரையல்கள் முடிந்த பிறகு கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிற ஆகஸ்ட் 15 க்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்பதுதான் பல விஞ்ஞானிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை எழுப்பும் விடயமாக மாறியிருக்கிறது.

உலகம் முழுவதும் பரவிவரும் ஒரு பெருந்தொற்றுக்கு எப்படி குறைந்த நாட்களிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும். மருந்தை கண்டுபிடிப்பது வேறு. அதை முறையான சோதனைக்கு உட்படுத்தி முடிவுகள் பெறுவது வேறு. பல மாதங்கள் முறையான சோதனைக்கு உட்படுத்தப் பட்டால்தான் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியும். தற்போது ICMR அவசர கதியில் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இது சரியான செயல் அல்ல என்றும் சில விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். சில மருத்துவர்கள் ICMR மனித உயிர்களை பணயம் வைக்க நினைக்கிறதா? எனவும் காட்டமான கருத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

புனே இந்திய அறிவியில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) சிறப்பு பேராசிரியர் வினிதா பால், “ஆகஸ்ட் 15 என்பது நம்பத் தகுந்த இலக்கு அல்ல. இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் எந்தவொரு வைரஸ் தடுப்பு மருந்தும் உருவாக்கப் பட்டதில்லை. நாம் அவசர, நெருக்கடி காலகட்டத்தில் இருக்கிறோம் என்று கருதினாலும் ஆகஸ்ட் 15 – ஆம் தேதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் அறிவிப்பில் உண்மைத் தன்மை இல்லை; மொத்தத்தில் சாத்தியம் இல்லாத அறிவிப்பு இது” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

புனே மருத்துவ பல்கலைக் கழகத்தின் பயோஎதிக்ஸ் துறை பேராசிரியர் ஒருவர் இந்த மருந்து ஆரம்பக் கட்ட சோதனையைத்தான் எட்டியிருக்கிறது. அதற்குள் எப்படி ஜுலை 7 ஆம் தேதி மனிதர்களின் மீதான சோதனை முயற்சியை தொடங்க முடியும். அதற்கு பல்வேறு ஆயத்தப் பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது. கிளினிக்கல் சோதனைக்கே இன்னும் தயாராக ஒரு மருந்தை எப்படி ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி ஆய்வு முறைகள்

இந்திய மருந்து தயாரிப்பு கழகம் COVIAXIN தடுப்பூசியை மனிதர்களின் மீது இரு கட்டமாக சோதனை செய்து பார்க்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இரு கட்டம் என்பது முதல் கட்ட சோதனை முயற்சியில் பெறப்படுகிற தரவுகளை வைத்துக் கொண்டு இரண்டாவது கட்ட சோதனைக்கு நகர்வது என்று பொருள். அப்படி பார்த்தால் இந்த சோதனை நெறிமுறைகள் பல மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் விஞ்
ஞானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பொதுவாக தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் (DSMB) கூறுகிற விதிமுறைகளின் படி ஒரு மருந்தை 12 நெறிமுறைகளை பின்பற்றி கிளினிக்கல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆனால் தற்போது சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ள COVIAXIN தடுப்பூசி மருந்துக்கு 7 விதிமுறைகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

DSMB கூறும் நெறிமுறை விதிகளுக்கே இந்த தடுப்பு மருந்து இன்னும் தயாராகவில்லை. அடுத்து முதல் கட்ட சோதனை என்பது 1,125 தன்னார்வலர்களை தேர்வு செய்து அவர்களை மூன்று குழுக்களாக பிரிக்க வேண்டும். முதல் குழுவில் 125 பேர் இருப்பார்கள். அவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி மருந்து கொடுக்கப்பட்டு 2 வாரங்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப் படுவார்கள். அந்த சோதனையில் ஒருவாரத்திற்கு பின் கிடைக்கும் தரவுகளை DSMB சோதனைக்கு எடுத்துக்கொண்டு டோஸ்களை அதிகரிக்கலாமா என பரிந்துரை செய்யும்.

அப்படி பரிந்துரை செய்தால் மட்டுமே 2 ஆவது குழு மற்றும் 3 ஆவது குழுவில் இருக்கும் நபர்களுக்கு அடுத்தடுத்து டோஸ்களை கொடுத்து சோதனைக்கு உட்படுத்த முடியும். இப்படி செய்யப்படும் முதற்கட்ட சோதனை முழுவதும் பெறப்படுகிற தரவுகளை சேகரித்து அதை ஆய்வு செய்தால் மட்டுமே இரண்டாவது கட்ட சோதனைக்கு நகர முடியும்.

இரண்டாவது கட்ட சோதனையில் பல வயதுடைய தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அதில் மொத்தம் 750 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு 2 வாரத்திற்கு டோஸ்கள் கொடுக்கப்படும். அடுத்து 28 நாள், 104 நாள், 194 நாள் என படிப்படியாக பல பிரிவுகள் பிரிக்கப் பட்டு மருந்துகள் கொடுக்கப்படும். அவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பீடுகள் பெறப்படும். இப்படி அடுக்கடுக்கான சோதனைகளை செய்தால் மட்டுமே பாதுகாப்பான உடலால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நோய் எதிர்ப்பு நுண்ணுயிர் தடுப்பு மருந்தைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்படி முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தாத தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதே இந்த நடைமுறையின் நோக்கம் எனவும் ஏற்கனவே ICMR விதிகளை வகுத்து வைத்து இருக்கிறது.

ஆனால் COVIAXIN விஷயத்தில் ஆகஸ்ட் 15 ஆத் தேதிக்குக்குள் இத்தனை சோதனைகளையும் முடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என பல விஞ்ஞானிகள் தற்போது எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். ICMR இன் விஞ்ஞானியான லோகேஷ் சர்மா “பல மாதங்கள் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப் பட்டு கொரோனா விற்கு எதிராக COVIAXIN முறையான நோய் எதிர்ப்பு திறனை உருவாக்குகிறதா? பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் இருக்கிறதா? என உறுதிப்படுத்தப் பட்ட பின்னரே பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்துகிறார். அப்படியில்லாமல் அவசர கதியில் தடுப்பு மருந்தைக் கொண்டு வந்தால் விளைவுகள் பயங்கரமாக இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.