சீனாவில் மட்டுமல்ல.. ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என பரவும் கொரோனா வைரஸ்..!

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வூஹானில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த வைரஸினால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்நிலையில், சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,788 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,000 ஆக அதிகரித்துள்ளது.

ஈரான் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அண்மையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரான் துணை அதிபர் மசூமே எப்டருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் இதுவரை 245 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பால் இதுவரை 19 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில் கொரோனா பாதிப்பால் மேலும் பொருளாதார சரிவை எதிர்கொள்வதாக அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உண்டாகும் ஆபத்து மிகவும் குறைவு என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 59 பேருக்கு கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

பிரான்ஸில் முதன்முறையாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸுக்கு வந்த ஒரு சீன சுற்றுலா பயணி உட்பட பிரான்ஸில் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இத்தாலியில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-ஐ எட்டியுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக முக்கிய கவனத்தை பெற்றுள்ள இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.