கொரோனா வைரஸ் ஆற்றல் இழந்து வருகிறது!!! மகிழ்ச்சித் தெரிவித்த இத்தாலி விஞ்ஞானிகள்!!!

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

 

இத்தாலி, கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வந்தாலும் தற்போது கொரோனா உயிரிழப்புகள் அந்நாட்டில் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியின் மிலன் மருத்துவனையின் தலைமை மருத்துவர் ராய் “கொரோனா வைரஸ் தனது ஆற்றலை இழந்து வருகிறது, கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போது பரவி வரும் வைரஸின் சுமை மிகவும் குறைவாக இருக்கிறது, இதனால் உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன” எனத் தெரிவித்து உள்ளார். இதேபோல சான் ரஃபேல் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆல்பர்டோ ஜாங்ரில்லோவும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸின் சுமை சற்று குறைவாக இருக்கிறது என்ற கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரேனாவால் உயிரிழப்பவர்களின் பட்டியலில் இத்தாலி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 33,415 உயிரிழப்புகள் அந்நாட்டில் பதிவாகி இருந்தது. தற்போது இறப்புகளின் பட்டியலில் இத்தாலி உலக அளவில் 6 ஆவது இடத்தில் இருக்கிறது. உயிரிழப்புகள் ஓரளவுக்கு குறைந்து இருப்பதாகவும் தற்போது ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 233,019 ஆக பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டின் தேசிய நோய்த்தொற்று அமைப்பும் கொரோனா வைரஸின் சுமை சற்று குறைவாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறது.

மார்டினா நோய்த்தொற்று மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெனோவா மேட்டியாவும் கொரோனா வைரஸின் சுமை குறைந்து இருப்பதாக கருத்து வெளியிட்டு இருக்கிறார். கொரோனா வைரஸ் பரவும் விதத்திலும் அது நோய் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்திலும் வைரஸின் சுமை (அளவு) வித்தியாசம் காணப்படுகிறது என்ற கருத்தை முன்னமே விஞ்ஞானிகள் வெளியிட்டு இருந்தனர். சார்ஸ் நோய் பரவிய ஆரம்பக் கட்டத்தில் அந்த வைரஸ் அதிக நோய் பாதிப்பை கொடுக்கவில்லை. எனவே வைரஸின் சுமை என்கிற ரீதியிலும் அது வேறுபட்டு காணப்படுகிறது என்ற கருத்தை தொடர்ந்து விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கூட வைரஸின் அதிகச் சுமையால் தான் வெகு விரைவாக இறந்து விடுகின்றனர் என்றுகூட கடந்த வாரத்தில் செய்தி வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.