சந்தோஷமாக ரிப்பன் வெட்டி.. குத்து விளக்கேற்றி.. கரோனா வைரசுக்கு தனி வார்டு திறப்பு..! எங்கு தெரியுமா?!
- IndiaGlitz, [Wednesday,January 29 2020]
கரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே பெரும் அச்சமும் சோகமும் அடைந்துள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டு, கோலமிடப்பட்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் இதுவரை ‘கரோனா’வைரஸ் நோய் ஒருவரைக் கூட தாக்கவில்லை. ஆனாலும், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவில் இருந்து வருவோர் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி அவசர சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் சிறப்பு தனி வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
மதுரை அரசு மருத்துவமனையிலும் இந்த சிறப்பு வார்டு இன்று திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் தனி மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளே இந்த வைரஸ் நோயால் பெரும் அச்சமும், சோகமும் அடைந்துள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டை, கோலம்போட்டு, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டீன் சங்குமணி, இந்த வார்டை வழக்கமான உடையில் வராமல் கோட் சூட் போட்டு டிப்டாப்பாக வந்து திறந்து வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நோயே யாருக்கும் வரக்கூடாது என்ற மனநிலையில் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் இருந்தாலும் வந்தால் அவர்களைப் பாதுகாக்க, கண்காணிக்கவே இந்த சிறப்பு வார்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்த வார்டையே ஒரு கட்டிடத் திறப்பு விழா போல் கொண்டாடும் மனநிலையில் வார்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.