சீனாவில் முடங்கிய மூலப் பொருட்கள்.. மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா..!

சீனாவில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் அங்குள்ள மருந்து கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்தியதால் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்து பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாரசிட்டமால் மருந்துகள் விலை 40 அளவுக்கு உயர்ந்துள்ளது.

1700 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ், சீனாவில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலைக்கான அச்சத்தை விதைத்துள்ளது. அங்குள்ள தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைத்துள்ளன.

சீன அரசு வைரஸ் பரவுவதை தடுக்க நாட்டு மக்களை நாட்டிற்க உள்ளேயும் வெளியேயும் செல்ல தடை விதித்துள்ளது. இது உலகளாவிய மருந்து விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விநியோக சந்தைகளை முற்றிலும் சீர்குலைத்துள்ளது.

சீனாவை தளமாகக் கொண்ட மருந்து உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கமால் உள்ளதால், மருந்து மூலப்பொருட்களுக்கு பெரிதும் சீனாவை நம்பியுள்ள இந்தியா போன்ற நாடுகள், மருந்தின் மூலப்பொருட்கள் கிடைக்காமல், எப்போது கிடைக்கும் என்று தெரியாத நிச்சயமற்ற தன்மையால் அதிர்ச்சியில் உள்ளன.

இதனால் இப்போது மருந்து பொருட்களின் இருப்பு போதாத நிலை காரணமாக மருந்து பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறுகிய அளவிலயே இந்தியாவில் உள்ளது. உலகிற்கு மிகப் பெரிய பொதுவான மருந்துகளை வழங்குபவர்களில் ஒருவரான இந்தியா, அமெரிக்க மருந்து சந்தையில் 12 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்தியா 80% பயன்பாட்டில் உள்ள மருந்து மூலப்பொருள்களின் தேவைக்காக சீனாவை நம்பியுள்ளது. இப்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய முடியாததால் மருந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை தாண்டி உலகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக பொதுவாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமால் விலைகள் இந்தியாவில் 40% உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் பலவகையான பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் அசித்ரோமைசினின் விலை 70% உயர்ந்துள்ளது என்று ஜைடஸ் காடிலாவின் தலைவர் பங்கஜ் ஆர் படேல் தெரிவித்தார்.

அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் பொருட்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், ஏப்ரல் முதல் மருந்தகத் தொழில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று அவர் கூறினார். இதற்கிடையில் இந்திய அரசு பற்றாக்குறை அதிகமாக உள்ள 12 அத்தியாவசிய மருந்துகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.