கொரோனாவுக்கு பயந்து தனித்தீவில் குடியேறிய இளம் தம்பதி!!! 9 மாதங்களுக்கு பிறகு வைரலாகும் வீடியோ!!!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் கொரோனா குறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் கொரோனாவிற்கு பயந்த ஒரு இளம் ஜோடி உலகின் எந்த மூலைக்காவது சென்று விடலாம் என முடிவு எடுத்து தனித்தீவிற்கு சென்ற சம்பவம் தற்போது உலகம் முழுவதும் கடும் வைரலாகி இருக்கிறது.

லண்டனைச் சேர்ந்த லுக் சாரா மற்றும் பிளாங்கன் எனும் இளம் தம்பதி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அயர்லாந்தில் உள்ள ஒரு தனித்தீவிற்கு சென்று உள்ளனர். கொரோனாவிற்கு பயந்து இவர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் குடியேறிய அந்த தீவில் குடிநீர் மற்றும் மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதியுமே இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு இவர்கள் இணையத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடிநீர் வசதி மற்றும் மின்சாரம் போன்ற வசதிகள் இல்லாத அத்தீவிற்கு செல்வதற்கு முன்பே சாரா தம்பதி சில பொருட்களை மட்டும் கொண்டு சென்றதாகக் கூறியுள்ளனர். தாங்கள் கொண்டு சென்ற சோலார் பேனல் மூலம் சூரிய மின்சாரத்தை உருவாக்கி அதன் மூலம் மின்சார அடுப்பு மற்றும் மொபைல் போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்வதாகத் தெரிவித்து உள்ளனர். மேலும் குடிநீருக்காக ஒரு தொட்டியைக் கட்டி மழைநீரை சேமித்து வைத்துக் கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அத்தீவில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து சமைத்து சாப்பிடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவிற்கு முன்பே பரபரப்பு இல்லாத ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்பது சாரா தம்பதியின் ஆசையாம். தறபோது கொரோனா நேரத்தில் இது மேலும் சாத்தியமாகி இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். அந்தப் புகைப்படம் தற்போது கடும் வைரலாகி வருகிறது.