வந்தாச்சு கொரோனா சுய பரிசோதனை கிட்....! ஒப்புதல் அளித்த ஐசிஎம்ஆர்...!

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

கொரோனா தொற்று உள்ளதா என வீட்டிலேயே தெரிந்துகொள்ள கோவிசெல்ஃப்டிஎம் என்ற, சுய பரிசோதனை கிட்-ஐ பயன்பாட்டில் கொண்டுவர இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், புனே-வைச் சேர்ந்த, மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் நிறுவனம் தான், கோவிசெல்ஃப்டிஎம் என்ற கிட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் பொதுமக்கள் இந்த கிட்-ஐ பயன்படுத்த சில விதிமுறைகளையும் வகுத்துள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்ய மாதிரி கூடங்களுக்கு செல்லத்தேவையில்லை. வீட்டிலிருந்தே பரிசோதனை செய்து கொள்ளலாம்.

கோவிட் அறிகுறி இருப்பவர்கள் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் என்கின்ற கிட் மூலம், தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். இதில் பாசிட்டிவ் என முடிவு வந்தால் அவர்கள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள தேவையில்லை. ஒருவேளை அவர்களுக்கு நெகட்டிவ் என வந்தால், ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம் ஒருசிலருக்கு வைரஸின் அளவு குறைவாகவே இருக்கும். இதனால் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என ஐஎம்சிஆர் கூறுகிறது.

சுய பரிசோதனை செய்வது எப்படி...?

வீட்டிலேயே சுய பரிசோதனை செய்வது எப்படி என்பது ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்-கிட்-ல் போடப்பட்டிருக்கும். மூக்கின் துவாரம் வழியே, சளி மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். 2 நிமிடங்களில் பரிசோதனையையும், 15 நிமிடங்களில் முடிவையும் அறிந்து கொள்ளலாம். இந்தப் பரிசோதனை செய்து கொள்பவர்கள், தங்கள் முடிவை தொலைபேசி எண் மூலமாக ஐசிஎம்ஆரின் கோவிட்-19 என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் ரகசியமாக சேமிக்கப்படும்.

இந்தியாவில் முதன் முதலாக , டிஸ்கவரி செல்யூஷன்ஸ் நிறுவனத்தின் கோவிசெல்ஃப்டிஎம் என்ற சுய பரிசோதனை கிட்-க்குத்தான் ஐசிஎம்ஆர் அங்கீகாரம் அளித்துள்ளது. பேத்தோ கேட்ச் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிட், அடுத்த வாரம் முதல் இந்திய மருந்தகங்களில் கிடைக்கும் எனவும், இதன் விலை ரூ.250 எனவும் கூறப்பட்டுள்ளது.