ஆஸ்திரேலிய லீக் போட்டிகளில் புது விதிமுறை! இது லீக் போட்டிகளின் தலைவிதியை மாற்றுமா???

 

ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக் (டி20) போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை அதன் பிபிஎல் நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. இந்தப் புது விதிமுறைகள் எதிர்காலத்தில் மற்ற லீக் போட்டிகளுக்கான நெறிமுறைகளிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவரக் கூடும் எனவும் சிலர் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிர்கள் இருப்பது போலவே ஆஸ்திரேலிய லீக் போட்டிகளுக்கும் உலகம் முழுவதும் ரசிர்கள் அதிகம். அந்தப் போட்டிகளில் தற்போது கொண்டு வரப்படும் புதிய மாற்றங்கள் எதிர்காலத்தில் மற்ற போட்டிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

பொதுவாக டி20 போட்டிகளில் முதல் 6 ஓவர்களில் பவர் பிளே இருக்கும். ஆனால் தற்போது நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய லீக் போட்டிகளில் அது 4 ஓவர்களாக குறைக்கப்படும் என்றும் மீதியிருக்கும் 2 பவர் பிளே ஓவர்கள் 11 ஆவது ஓவரைத் தாண்டி அதாவது 11-20 ஓவர்களில் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு பெயர் பவர்சர்ஜ் எனக் குறிப்பிடப்படும் என பிபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

பவர் பிளே ஓவர்கள் என்றால் உள்வட்டத்துக்குள்ளேயே அனைத்து ஃபீல்டிங் வீரர்களும் இருக்க வேண்டும். 2 வீரர்கள் மட்டும்தான் உள்வட்டத்தை தாண்டி நிறுத்த முடியும். இதனால் பேட்டிங்க் செய்யும் அணி அதிக 4, 6 களை வீச முடியும். தற்போது நடைபெற இருக்கும் லீக் போட்டிகளில் முதலில் 4 பவர் ப்ளே ஓவர்கள் மட்டுமே இருப்பதால் பேட்டிங்க் செய்யும் அணி எடுத்த எடுப்பிலேயே அதிக ரன்களைக் குவிக்க முடியாது. இதனால் பீல்டிங் செய்யும் அணி எதிரணியின் ரன்களை மட்டுப்படுத்தலாம்.

அதேபோல 11 ஓவர்களைத் தாண்டி, 12-13 அல்லது 15-16 ஏன் 19-20 என பவர் பிளேவை பீல்டிங் செய்யும் அணி எடுக்கும் போது அது பேட்டிங் அணிக்கு சாதகமாக முடிய வாய்ப்பு இருக்கும். இந்த விதிமுறைகள் போட்டிகளின் நிலவரத்தை கணிக்க முடியாத அளவிற்கு இருக்கும் எனவும் புது உற்சாகத்தை இது ஏற்படுத்தும் எனவும் சில ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

மேலும் 10 ஓவர்களுக்கு பிறகு எக்ஸ் ஃபேக்டர் பிளேயர் (X-Faxctor player) எனும் விதியை இரு அணிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் புது விதியின் மூலம் பிளெயிங் 11 மற்றும் ஒரு மாற்று வீரர் என மொத்தம் 12 வீரர்கள் இருப்பதற்கு பதிலாக பிளெயிங் 11+ 2 மாற்று வீரர்களை வைத்து அணியில் 13 பேராக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் 10 ஓவருக்கு பிறகுதான் இந்த விதியை பயன்படுத்த முடியும்.

மேலும் பந்து வீசம் அணி இந்த வசதியை உபயோகப்படுத்தும் பட்சத்தில் 10 ஓவர்களின் முடிவில் அதுவரை ஒரு ஓவருக்கு மேல் பந்து வீசாத நபரை மட்டுமே மாற்று வீரராக சேர்த்துக் கொளள் முடியும். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் 2 மாற்று வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனும்போது ஒரு பந்து வீச்சாளர் மற்றும் ஒரு பேட்ஸ்மேன் எனத் தேர்வு செய்து கொள்ள அணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

மேலும் ஆஸ்திரேலிய லீக் போட்டியில் இன்னொரு முக்கியமான புதிய விதிமுறையும் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறை வெற்றி, தோல்வியை தலைகீழாக மாற்றிவிடும் அளவிற்கு சுவாரசியம் கொண்டதாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த விதிமுறை பேஷ் பூஸ்ட் (Bash Boost) என அழைக்கப்படும். அதாவது ஆஸ்திரேலிய லீக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் ஒரு அணி வெற்றி பெற்றால் இதுவரை கொடுக்கப்படும் 2 புள்ளிகளுக்கு பதிலாக இனிமேல் 3 புள்ளிகள் பெறலாம்.

இதுதவிர ஒரு போனஸ் புள்ளிகளையும் பெற முடியும். ஆனால் போனஸ் புள்ளி வெற்றிப் பெற்ற அணிக்குத்தான் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் தோல்வி பெற்ற அணியும் அந்த போனஸ் புள்ளியை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இரண்டு அணிகளும் முதல் 10 ஓவர்களில் எப்படி விளையாடுகிறார்களோ அதைத் பொறுத்துத்தான் அந்த போனஸ் புள்ளி கிடைக்கும். முதல் 10 ஓவர்களில் பேட்டிங் செய்யும் அணி எடுக்கும் ரன்களை விட அதிக ரன்களை பீல்டிங் செய்யும் அணி எடுத்தால் போனஸ் புள்ளி பில்டிங் செய்யும் அணிக்கு வழங்கப்படும். இதனால் போட்டி இன்னும் அதிக சுவாரசியம் கொண்டதாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய லீக் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் எதிர்காலத்தில் மற்ற போட்டிகளிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுப்பப் பட்டுள்ளது. காரணம் குறைந்த நேரமே கொண்ட லீக் போட்டிகளில் அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. எனவே மற்ற போட்டிகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சிலர் கருத்துக் கூறிவருகின்றனர்.