ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடராஜனுக்கு வாய்ப்பா? பரபரப்பு தகவல்!!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற தகவலை பிடிஐ செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. காரணம் இந்திய அணியின் மூத்த பவுலர்கள், ஆல் ரவுண்டர் எனத் தொடர்ந்து அணிவீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நடராஜன் அணிக்குள் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

பிரிஸ்பனில் நடைபெற உள்ள 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகி உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் தகவல் தெரிவித்து இருக்கிறது. அடிவயிறு வலி காரணமாக இவர் அணியில் இருந்து விலகுவதாகவும் அவரது காயம் இன்னும் அதிகமாகாமல் தடுக்கும் வகையில் ஓய்வு அளிக்கப் படுவதாகவும் பிசிசிஐ தெரிவித்து உள்ளது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கிறது. அந்தப் போட்டிக்கு இவர் தயாராக வேண்டும் என்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் உள்ள ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜடேஜா, ஹனுமா விஹாரி என்று பலர் காயத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பும்ராவும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக வீரர் நடராஜனுக்கு பிரிஸ்பனில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. மேலும் ஜடேஜாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் வரும் ஜனவரி 15 ஆம் தேதி பிரிஸ்பனில் நடைபெற உள்ள 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அனுபவம் குறைந்த சிராஜ், ஷர்துல் தாக்குர், சைனி, டி.நடராஜன் கூட்டணி வேகப்பந்து வீச்சில் இடம் பெறுவர் என்றும் கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது.