close
Choose your channels

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Sunday, September 20, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் அபுதாபியில் நடந்த முதல் லீக் போட்டியில் கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தனது பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு சவுரவ் திவாரியும் (42), குயிண்டன் டிகாக்கும் (33) ஓரளவு கைகொடுக்க மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாட்சன் (4), விஜய் (1) சொதப்பலான துவக்கம் அளித்தனர். ஆனால் அடுத்து இணைந்த அம்பதி ராயுடு, ஃபாஃப் டூபிளசிஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

சூப்பர் ஜோடி

ஒருபக்கம் டூபிளசி நிதானமாக ரன்கள்  சேர்க்க, மறுபக்கம் ராயுடு அதிரடியாக ரன்கள் சேர்த்தார்முதலில் ஜஸ்ப்ரீத் பும்ரா வேகத்தில் சிக்சர் அடித்த ராயுடு, பின் சகார் சுழலில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார். தொடர்ந்து க்ருனால் பாண்டியா சுழலில் சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். ராயுடு, டுபிளஸிஸ் ஜோடியை பிரிக்க மும்பை பவுலர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில் சென்னை அணியின் வெற்றிக்கு 36 பந்தில் 58 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா வீசிய 15 ஒவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டதுராகுல் சகார் வீசிய அடுத்த ஓவரின் இரண்டாவது பந்தில் ராயுடு கொடுத்த சுலபமான கேட்ச் வாய்ப்பை பாயிண்ட் திசையில் நின்ற க்ருனால் பாண்டியா கோட்டைவிட்டார். ஆனால் அதே ஒவரின் கடைசிப் பந்தில் ராயுடு அவுட்டாகி வெளியேறினார். பின் வந்த சாம் கரன் அதிரடி காட்ட சென்னை அணி வேகமாக வெற்றியை நோக்கி நகர்ந்ந்தது. இதையடுத்து சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

5 ஓவரில் 6 விக்கெட்

இப்போட்டியில் சென்னை அணி பவுலர்கள் ஆரம்பத்தில் சொதப்பியபோதும் கடைசி நேரத்தில் எழுச்சி பெற்றனர். மும்பை அணி 14ஆவது ஓவரின் முடிவில் 121 ரன்களுக்கு வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. ஆனால் 20ஆவது ஓவரின் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

இந்த 5 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. குறிப்பாக ஜடேஜா வீசிய போட்டியின் 15ஆவது ஓவரில் அந்த நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்தி வந்த சவுரவ் திவாரி, ஹர்திக் பாண்டியா ஆகியோரை டூபிளசிஸ் பவுண்டரி அருகே மிரட்டலான கேட்ச் பிடித்து வெளியேற்றினார். இது சென்னை அணிக்கு மிகப்பெரிய திருப்பத்தை அளித்தது. அதுவரை ரன்களை வாரி வழங்கிக்கொண்டிருந்த லுங்கி நிகிடி 19ஆவது ஓவரில் ஆபத்தான போலார்டை அவுட்டாக்க, மும்பை அணியின் ரன் வேகம் அப்படியே குறைந்தது.

கைகொடுத்த ரிவியூ

சென்னை அணி பேட்டிங் செய்த போது போட்டியின் 2 ஓவரின் கடைசி பந்தில் சிஎஸ்கே வீரர் முரளி விஜய் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அம்பயர் அவுட் கொடுத்தவுடன் கொஞ்சமும் யோசிக்காமல் பெவிலியன் நோக்கி நடக்க துவங்கினார். எதிர்முனையில் இருந்த சகவீரர் டூபிளஸிஸ், பந்து ஸ்டெம்ப்பிற்கு வெளியே விலகிச் செல்கிறது என்றும் கைவசம் இருந்த ரிவியூவை பயன்படுத்தும் படியும் சைகையில் கூறினார். ஆனால் இதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத விஜய் விறுவிறுவென பெவிலியனுக்கு திரும்பினார். ஆனால் ரீப்ளேவில் அது அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் சென்னை அணி தேவையில்லாமல் பவர் ப்ளே என அழைக்கப்படும் முதல் ஆறு ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ரிவியூ கடைசி நேரத்தில் கேப்டன் தோனிக்குக் கைகொடுத்தது.

தொடரும் நோ பால் சோகம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சொதப்பலாக நோபால் வீசுவது தொடர் கதையாகவே உள்ளது. பும்ரா யார்க்கர்கள் வீசுவதில் கில்லாடியாக இருந்தபோதும் இக்கட்டான நேரத்தில் நோ பால் வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிராக பவர் ப்ளே என அழைக்கப்படும் முதல் ஆறு ஓவர்களில் போல்ட், பாடின்சன் இருவரும் விக்கெட் வீழ்த்தி ரன்களை கட்டுப்படுத்த,  ஆறாவது ஓவரை வீசிய பும்ரா, கடைசி பந்தை நோபாலாக வீசினார். இதனால் கிடைத்த ப்ரீ ஹிட் வாய்ப்பை ராயுடு சிக்சராக மாற்றினார்.

 

துரத்தும் தோல்வி

ஐபிஎல் அரங்கில் மும்பை அணியின் முதல் போட்டி சோகம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் தொடர்ந்தது. நேற்றைய முதல் போட்டியின் தோல்வி மூலம் மும்பை அணி கடந்த 2013 முதல் தான் பங்கேற்ற 8 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தரிசனம் தந்த தோனி

சுமார் 437 நாட்களுக்கு பின் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியில்  தோனி களமிறங்கினார். இவரின் பேட்டிங்கைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் இருந்தனர். அதற்கு ஏற்ப சாம் கரன் அவுட்டான பின் தோனி 7ஆவது வீரராக களமிறங்கினார். முன்னதாக தோனி மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றதை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெல்கம் பேக் தோனி என உற்சாகமாகக் கொண்டாடினர்.

தலைகீழான தருணம்

இப்போட்டியில் மும்பை அணியின் க்ருனால் பாண்டியா வீசிய 18ஆவது ஓவர் போட்டியின் தலையெழுத்தையே மாற்றியது. அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜாவை குர்னால் அவுட்டாக்கினார். ஆனால் அடுத்து வந்த சாம் கரன் அதே ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இது போட்டியைச் சென்னை வசம் வேகமாக இழுத்தது. மும்பை அணியில் ஆல் ரவுண்டர்களான போலார்டு, ஹர்திக் பாண்டியா என இருவர் இருந்தபோதும் அவர்களை பவுலிங் செய்ய கேப்டன் ரோஹித் அழைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மும்பை: 162/9 - 20 ஓவர்களில்

சென்னை: 166/5 - 19.2 ஓவர்களில் (5 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி)

ஆட்ட நாயகன்: அம்பதி ராயுடு

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.