புரட்டி எடுக்கும் கொரோனா வைரஸ்க்கு கிரீன் டீ, டார்க் சாக்லேட் எல்லாம் கூட மருந்தா??? புது விளக்கம்!!!
- IndiaGlitz, [Wednesday,December 02 2020]
கொரோனா வைரஸில் இருக்கும் ஒரு முக்கிய நொதி (Enzyme) செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் சில உணவுகள் இயற்கையாகவே ரசாயன சேர்மானங்களை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அதில் கிரீன் டீ, டார்க் சாக்லேட், மஸ்கடின் திராட்சை போன்ற சில உணவுகள் மட்டும் கொரோனா வைரஸ்க்கு எதிராக ரசாயன சேர்மானங்களை உருவாக்கும் தன்மை கொண்டது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த வைரஸை குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி அமெரிக்காவின் வட கரோலினா மாநில பல்கலைக் கழகத்தின் தாவர உயிரியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸை பெருக்கும் நொதியை (Mpro) சில ரசாயன சேர்மானங்கள் செயலிழக்க செய்யும். இதனால் உடலில் உள்ள கொரோனா வைரஸின் பெருக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என்று விளக்கம் அளித்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்திய பின்பு அவரது மனித உடலில் பல்லாயிரக்கணக்காக பெருகுவதற்கு ஒரு முக்கிய நொதி செயல்பாடு நடைபெறுகிறது. அப்படி கொரோனா வைரஸ் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் புரோட்டீஸ் எனும் நொதி சேர்மானத்தை சில உணவுகளில் உள்ள ரசாயன சேர்மானங்கள் இயற்கையாகவே செயலிழக்க செய்யும் தன்மையைக் கொண்டு இருக்கின்றன.
அதாவது கிரீன் டீ, கோகோ பவுடர், டார்க் சாக்லேட், மஸ்கடின் திராட்சை போன்ற சில பொருட்களின் ரசயான சேர்மானங்களை கொரோனா வைரஸின் நொதி புரோட்டீஸ் (Mpro) உடன் சேர்க்கும்போது அது இயற்கையாகவே எதிர்வினையாற்றத் தொடங்குகிறது. அப்படி எதிர்வினையாற்றும்போது கொரோனா வைரஸின் (Mpro) பெருக்கத் தன்மையை தாக்கி அழித்து விடவும் செய்கிறது.
இதனால் கிரீன் டீ, கோகோ பவுடர், டார்க் சாக்லேட், மஸ்கடின் திராட்சை போன்ற சில பொருட்களில் உள்ள ரசாயன சேர்மானங்கள் கொரோனா வைரஸின் பெருக்கத் தன்மையை குறைக்கவும், செயலிழக்கவும் பயன்படும் என்பதை விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர். இதுகுறித்த ஆய்வு கருத்துகள் அனைத்தும் தாவர அறிவியல் முன்னணி ஆய்விதழில் வெளியிடப்பட்டு உள்ளது.