விமர்சகர்களுக்கு வகுப்பெடுக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் !
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆகியுள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தை நடிகர் ஆர்யா தனது தி ஷோ பிபுல் பேனர் முலம் தயாரித்துள்ளார்.
திரைப்படங்களை விமர்சனம் செய்து கிழித்துத் தொங்கவிடும் யூடியூப் பிரபலம் கிஸ்ஸா 47 ( சந்தானம் ) . அவருக்கு ஆதரவாக ஒரு கூட்டம் , எதிராக ஒரு கூட்டம் என டிரெண்டிங்கில் இருக்கிறார். திரைப்படங்களுக்கு மோசமான விமர்சனம் கொடுப்பவர்களை குறிவைத்து சிறப்புக் காட்சி என்கிற பெயரில் ஒரு பாழடைந்த திரையரங்கிற்கு வர வைக்கிறார் இறந்து போன ஹிட்ச்காக் இருதயராஜ் ( செல்வராகவன்) . அங்கே குடும்பத்துடன் இருதயராஜ் வைத்த பொறியில் சிக்குகிறார் கிஸ்ஸா 47 முடிவு என்ன என்பது மீதி கதை.
கிஸ்ஸா 47 கதாபாத்திரத்தில் மறைமுகமாக நேரடியாக என விமர்சகர்களை வறுத்தெடுத்து வகுப்பு எடுத்திருக்கிறார் சந்தானம். வழக்கமான காமெடி, கலகல கூட்டணியில் களம் இறங்கியிருக்கிறார். சந்தானத்துக்கு அம்மா, அக்கா என கஸ்தூரி, யாஷிகா ஆரம்பத்தில் ஆர்தடாக்ஸ் கெட்டப்பில் வருவதெல்லாம் ஆத்தாடி ரகம். அதுவும் நைட்டி மேல் துண்டு போர்த்திய யாஷிகா அதிர்ச்சிதான்.
படத்தின் மிகச் சில காட்சிகளில் காமெடி சரவெடியாக கௌதம் வாசுதேவ் மேனன் வந்திருந்தாலும், அப்படி ஒரு பர்னிச்சரை இப்படி நொறுக்கிட்டிங்களே என சொல்லத் தோன்றுகிறது. அவர் மட்டுமா உடன் இணைப்பாக இணைந்து இருக்கிறார் செல்வராகவன். படம் முழுக்க காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை. டிடி ரிட்டன்ஸ் பார்த்து ரசித்து , அதற்கு ரசிகராக மாறி இந்த படத்திற்கு வந்தால் சிலருக்கு சின்ன ஏமாற்றமாக இருக்கலாம். ஏனெனில் அந்தப் படம் இன்னும் சிரிப்பு சரவெடியாக நம்மை சீட்டில் உருள வைக்கும். அந்த லெவலை முயற்சி செய்திருக்கலாம்.
கொஞ்சம் ' ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ' திரைப்பட கதை, பாலிவுட் ' சுப் ' படம் கொஞ்சம், தி ரிசார்ட் சீரிஸ் கொஞ்சம் என அனைத்தையும் ஒன்றிணைந்து கலந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சினிமா உருவாக்கத்தின் பின்னணி கடின உழைப்புப் புரியாமல் இஷ்டத்துக்கு விமர்சனம் செய்வோருக்கு இந்தப் படம் ஒரு பாடம் தான். அதிலும் நாசுக்காக அதே சமயம் உரைக்கும் படி சொன்ன விதம் அருமை.
தீபக் குமார் பதி சினிமோட்டோகிராபியில் குரூஸ் கப்பல் காட்சிகள், பாழடைந்த திரையரங்கத்தின் இரண்டு விதமான தோற்றங்கள், என கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங்கில் படம் இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள்தான். அவ்வளவு ஷார்ப் கட் கொடுத்து இருக்கிறார். இருப்பினும் அந்த எடிட்டிங் பயனளிக்கவில்லை. சில இடங்கள் அங்கேயே சுற்றிக்கொண்டு நீளமாக செல்வதாக தோன்றுகிறது. ஆஃப்ரோ இசையில் கிஸ்சா 47 பாடல் ட்ரெண்டிங் ரகம். ஆனால் சென்சார் தரப்பு கட் கொடுத்து விட்டது. பின்னணி இசை ஹாரருக்கு ஏத்த அதிரடியாக உதவி இருக்கிறது.
வீண் பேச்சு, சப்டைட்டில் , மேஸ்திரி இருக்குப்பா காமெடிகள் டைமிங் ரகம்.
மொத்தத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் கொடுத்த முழுமையான காமெடி அனுபவம் இல்லை என்றாலும் ஓரளவிற்கு சிரிக்க வைத்த விதத்தில் கோடை விடுமுறைக்கு ஏற்ற காமெடி திரைப்படமாக மாறி இருக்கிறது சி டிடி நெக்ஸ்ட் லெவல் '.
Comments